வீட்டுவேலை,குடும்பம்,பிள்ளைகள் கல்வி, ஒரு பக்கமும் நகரவிடாமல்
இருக்கவைக்கும் சீரியல்கள் என்பன இன்றைய பெண்களை இறுக்க கட்டி வைத்திருக்கும்
கயிறுகள் இதைத்தாண்டி ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்து பெண்கள் பொதுவேலை, தொண்டுகள் என
இறங்கிவிட முடியாது அப்படி இறங்கிய பெண்களுக்கு பின்னால் எல்லாம் குறைவில்லாத
செல்வம் அல்லது எல்லோருக்கும் தெரிந்த பிரபலங்களின் மனைவி என்ற அந்தஸ்து
இருப்பதால்தான் செயற்பட முடிகின்றது. எனக்கு தெரிந்து முகேஸ் அம்பானி மனைவி,
மற்றும் சுகாசினி மணிரத்தினம் போன்றோரைப் போல… இவர்களைப் போல் இல்லாமல் ஒரு அன்றாட
தேவைகளை நிறைவு செய்யப் போராடும் பெண்களும் பொது வாழ்வில் ஈடுபட முடியுமா என்ற
வினாவுக்கு ஒரு நகர புறத்தில் வாழும் இவர்கள் விடையளித்தார்கள்…. அந்த சுவாரசியமான
சந்திப்புத்தான் இந்த பதிவு.
சிலர் மட்டும் தங்களை மற்றவர்களிடம் இருந்து
வித்தியாசப்படுத்திக் கொள்கின்றார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் இருந்துவிட்டு போவது
எல்லோருக்கும் பிடித்தமானது அல்ல தங்களுக்குள் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு
வருவதற்கு முனைதல், ஏழ்மையோடு இருந்துகொண்டே பிறரின் துயரம்போக்க பாடுபடுதல் இவ்வாறான
எண்ணங்கள்தான் நல்ல தலைவர்களையும் வழிகாட்டிகளையும் நம் தேசத்துக்கு
தந்திருக்கின்றது. இங்கு குறிப்பிடபோகும் பெண்கள் சரித்திர நாயகர்கள் என்றோ அல்லது
இவர்களைப் போல யாரும் இதுவரை செய்யவில்லை என்றோ கூறுவதற்கான பதிவு அல்ல இது,
கிராமத்துக்கு கிராமம் இப்படியானதொரு கூட்டம் இருக்க வேண்டும் என்ற ஆசையின்
வெளிப்பாடு, ஒரு வேளை இப்படியாக செயற்படுபவர்கள் உங்கள் தெருக்களிலும் இருக்கலாம்
அப்படியிருந்தால் அவர்களை வெளி உலகத்துக்கு தெரிய வைக்கின்ற மகிழ்ச்சிதான் இந்த
பதிவு
குழு பற்றிய ஓர்
அறிமுகம்
சிதம்பரம்
நகராட்சிக்கு உட்பட்ட நகர்புறபகுதியான
சிவசண்முகம் தெரு 1வது வட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து
வாழ்வாதரத்துக்கு வழிதேடி வந்த சுமார் 150 குடும்பத்தினர் இருக்கின்றனர். விவசாய
தினக்கூலி, நகரப்பகுதியில் சுமைத்தொழில், கம்பனிகளில் கொடுக்கப்படும் தினசரி
கூலிவேலையென பல்வேறு பகுதிகளில் தினசரி வாழ்க்கைக்கு வழிதேடும் இவர்களுடன் சென்ற
வருடம் Skills India கைகோர்த்துக்கொண்டது. இப்பகுதியினுள் பணிபுரிவதற்காக நமது
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் சென்றபோது முதலில் சந்தித்தது
தங்கமணி என்கின்ற 28 வயது இளைஞர் M.Sc, B.Ed முடித்துவிட்டு ஒரு தனியார் வங்கியில்
சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் பொறுப்பில் இருக்கின்றார். ஊரில்
விரல் விட்டு எண்ணக்கூடிய படித்த இளைஞர்களில் ஒருவர், தானாக முன்வந்து இந்த
சமுகத்துக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என நினைத்து செயற்படும் இவர்
தன்னையும் நம் செயற்பாடுகளோடு இணைத்துவிட்டார். இவரின் உதவியுடனும் அங்கிருக்கும்
பெண்கள் சிலரும் சேர்ந்து இங்கு நமது நிறுவனத்தின் உதவியுடன் ஒரு மகளீர் குழுவினை
அமைக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தினை கூறிய போது அதற்கு சரியானதொரு விடை
கிடைத்ததாகவே படவில்லை அருள்தேவனுக்கு காரணம் அங்கு பல குழுக்களை பல்வேறு
நிறுவனங்கள் சார்பிலும் அரசின் சார்பிலும் அமைத்து கடனுதவிகளைக் கொடுத்து
வருகின்றனர், இதன் காரணமாக தற்போதய சூழ்நிலையில் நம்முடன் குழுவில் சேர
யார்வருவார்கள் என்ற ஐய்யப்பாடு இருவர் மத்தியிலும் இருந்தது. இதனை பேச்சு வடிவிலே
வைத்திருந்த ஓரிரு மாதத்தின் பின்னர் தங்கமணியிடம் இருந்து அழைப்பு வந்தது
அருள்தேவனுக்கு; நமது பகுதியில் உங்களது நிறுவனத்தின் உதவியோடு செயற்பட ஒரு குழு
உருவாக்கி வைத்திருக்கின்றேன் வாருங்கள் என அழைத்திருந்தார். அழைப்பினை ஏற்று
சென்று முதல் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் அருள்தேவன் அவர்கள் கடந்த 11
மாதங்களாக இப்பகுதியில் செயற்பட்டுவரும் இக்குழுவினைப் பற்றி நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும் என்று பலமுறை அழைப்பினை விடுத்திருந்தார் அருள்தேவன் கடந்த 2ம்
தேதி அங்கு செல்ல நேர்ந்த போது அவர்களை பார்வையிடுவதற்காக கூட்டத்தினை ஏற்பாடு
செய்திருந்தார். குழுவில் இருந்த 12 உறுப்பினர்களும் தன்னார்வ தொண்டர் தங்கமணியும்
வந்திருந்தனர்.
சம்பிரதாயங்களுடனான அறிமுகங்களின் பின்னர் குழுவின் தலைவி
அவர்கள் பேச ஆரம்பித்தார். எனது பெயர் கொளஞ்சியம்மாள், வயது 48 எங்களது குழுவின்
பெயர் இமானுவேல் மகளீர் குழு. கடந்த 2011 செப்டம்பர் மாதம் சிவசண்முகம் தெருவினை
மைய்யமாக வைத்து இந்த குழுவினை ஆரம்பித்தோம். தம்பி தங்கமணியினதும், Skills India
தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு.அருள்தேவன் அவர்களது
வழிகாட்டுதலின் பேரிலும் இந்த குழுவினைச் செயற்படுத்தி வருகின்றோம். இதை ஆரம்பித்தது
முதற்கொண்டே சாதாரண சுய உதவிக் குழுவினைப்போன்று செயற்படக் கூடாது என்ற ஆசையும்
மற்றவர்களைப் போல கடன் உதவியை வாங்கிக் கொண்டு மாதாமாதம் தவணை கட்டும்
முறைசார்ந்ததாக இல்லாமல் சமுகத்தின் நலனுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற
அக்கறையும் எங்கள் குழுவினருக்கு இருந்தது இதற்கு உறுதுணையாக தவமணியும்,
அருள்தேவன் அவர்களும் எமக்கு வழி காட்டினர் அவர்களோடு சேர்ந்து இவ்வாறு சமுகத்தின்
பேரில் அக்கறையுடைய குழு உறுப்பினர்களை எங்கள் பகுதியில் இருந்து தேர்ந்து
எடுத்தோம். எங்கள் குழுவின் சார்பாக பொதுநலனைக் கருதி செய்யும் செயற்பாடுகளைத்தவிர
ஒவ்வொருவரும் தனித்தனியாக பல்வேறு சமூகநலன் பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களை
எல்லாம் ஒருங்கிணைத்து இந்த குழுவினை இப்பகுதியின் பெண்களின் சமுக மேம்பாட்டுக்
குழுவாக மாற்றி அமைத்தோம். எங்கள் குழுவானது இப்பகுதியில் எவ்வாறான செயற்பாட்டினை
ஆற்றுகின்றது என்பதை இக்குழுவின் துணைத்தலைவி அவர்கள் கூறுவார்கள் எனக் கூறிமுடித்தார்.
அவரது ஆரம்ப உரையிலும் அவர்கள் அந்த சமுகத்தின் மீது அக்கறை கொண்டு செயற்படும்
நோக்கத்தையும் கூறிய போது ஆச்சரியமும், ஆவலும் மேலோங்கி நின்றது. அந்த ஆவலுடன்
அவரது பேச்சினைக் கேட்கத் தயாரானேன்.
குழுவின் செயற்பாடுகள்
எனது பெயர் B.அம்சவள்ளி இந்த குழுவின் துணைத்தலைவியாக
இருக்கின்றேன். எங்கள் குழுவானது இந்த ஊர்மக்களின் குறைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு
அமைப்பாகவும், மக்களின் பொதுவான பிரச்சனைகளை எடுத்து ஆராயும் குழுவாகவும்
செயற்படவேண்டும் என்ற நோக்கில் செயற்படுத்த ஆரம்பித்தோம். ஆரம்பித்தது முதற்கொண்டு
இருந்துவரும் அடிப்படை பிரச்சனைகளை எடுத்து செயற்பட முடிவு செய்தோம். முதலில்
எங்கள் தெருவுக்கு நாங்கள் குடிவந்தது முதல் தெருவிளக்கு அமைக்கப்படாமலே இருந்து
வந்தது, இதனை பெற்றுதரவேண்டும் என்பதினை முதற்செயற்பாடாக கருதி அதற்காக யார்யாரை
சென்று பார்க்கவேண்டும் என்ற விபரங்களை எல்லாம் திரட்டினோம். மின்சாரவாரியம்,
நகராட்சி, பகுதி MLA என ஒருவர் விடாமல் அனைத்து பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மனுவினை
குழுவின் சார்பாக கொண்டு கொடுத்து வந்தோம். உடனடியான செயற்பாடுகள்
ஆரம்பிக்காவிட்டாலும் மறுபடியும் மறுபடியும் நாங்கள் சென்று பார்த்த போது ஒரிரு
மாதங்களுக்குள் எங்கள் பகுதியில் தெரு விளக்கு அமைக்கப் பட்டது. இதுதான் எங்கள்
குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி.ி
இதன் பின்னரான செயற்பாடுகளாக குடிநீர் குழாய்கள் சரிவர எல்லா
பகுதிகளிலும் இல்லாமல் இருந்தது அதனை சரி செய்யவும் ஒரே இடத்தில் எல்லோரும்
தண்ணீர் பிடிக்கும் அவலத்தையும் எடுத்து சென்று பேசி ஒவ்வொரு தெருவுக்கும்
குடிநீர்குழாய் அமைக்கச் செய்தோம்,நாங்கள் இருக்கும் பகுதி தாழ்வானது
மழைகாலங்களில் இருப்பிடங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துகொள்ளும், அத்தோடு
மட்டுமில்லாமல் தெருக்கள் எல்லாம் பழுதடைந்து சென்றுவர முடியாமல் இருக்கின்றது
இதற்கு ஒரு காங்க்ரீட் ரோடு அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை இப்போது
வரைக்கும் எல்லா அலுவலகங்களிலும் பொறுப்பானவர்களிடமும் பேசிவருகின்றோம், பேச்சு
அளவில் ஆம் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர அதற்கான வேலைகள் இன்னும்
நடைபெறவில்லை ஆனால் நாங்கள் தொடர்ந்து இவர்கள் அமைக்கும் வரை எல்லோரிடமும் எங்கள்
குழுவின் சார்பாக செல்லவுள்ளோம் என கூறி தொடர்ந்த அவர் எங்களது மற்றுமொரு
செயற்பாடாக இந்த பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி என்பது ஒரு
நிலைதாண்டி நிலையாக இருப்பதில்லை காரணம் குடும்ப சுமையும், குடும்பத்தில் சரியான
கவணிப்பும் இல்லாமைதான். இவர்களை மேற்கொண்டு படிக்க வைக்கவேண்டும் பள்ளி
செல்லாதவர்களை மீள பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாட்டினை மேற்கொண்டு
வருகின்றோம் பெரும்பாலும் மாணவர்கள் 8ம் வகுப்பிலே தமது படிப்பினை கைவிட
முனைகின்றனர், பெண்கள் 10 வது க்கு மேல் படித்தவர்களை காண்பது அரிது இவர்களை
ஊக்குவிப்பதற்கு எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு நபர்களும் தனிப்பட்ட முறைகளில்
செயற்பட்டு வருகின்றனர், அவர்கள் ஒவ்வொருவரையும் உங்களிடத்தில் அறிமுகப்படுத்தி
கொள்ள ஆசைப்படுகின்றேன் எனக்கூறினார், இடையில் குறுக்கிட்ட நான் அவர்கள்
ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி கூறி அவர்கள் இந்த குழுவில் இருந்து ஆற்றும் பணியினை
தெரிவித்தால் நன்றாக இருக்குமே எனக்கூறினேன் எல்லோரும் சரியென ஆமோதித்தனர்,
முதலில் தலைவி கொளஞ்சியம்மாளிடம் இருந்து ஆரம்பித்தார்கள்.
எனது பெயர் கொளஞ்சியம்மாள் வயது-48 எனது கணவர் இறந்துவிட்டார்,
ஒரு பெண் பிள்ளையும் ஒரு பையனும் இருக்கின்றனர், மகள் B.E இரண்டாவது வருடம்
படித்துவருகிறாள், மகன் 7th படித்து வருகின்றான், கணவர் இறந்ததில்
இருந்து விவசாயக் கூலியாக சென்று எனது குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டி
வருகின்றேன், எனது வேலை நேரம் போக இந்த குழுவின்மூலம் எங்கள் பகுதி மக்களின்
பிரச்சனைகளுக்காக செயற்படுவேன், பொதுப் பிரச்சனைக்காக மனு கொடுத்தல், உரிய
பொறுப்பானவர்களை சென்று பார்ப்பதற்கு நானும் என்னுடன் சிலரையும் அழைத்துச்
செல்வேன். மாணவர்கள் யாரும் இடைநிறுத்தம் செய்திருந்தால் அவர்களது வீட்டுக்கு
சென்று அவர்கள் பெற்றோருடன் பேசி பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாட்டினைச் செய்வேன்.
பொதுப் பிரச்சனை சார்பாக உடனடித்தேவைகளுக்கு கூடிப் பேசுவோம், இந்த குழுவில்
தலைவியாய் இருப்பதற்கு எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது எனக்கூறினார்.
தொடர்ந்து துணைத்தலைவி B.அம்சவள்ளி பேசினார், என்
குடும்பத்தில் 5 மகன்களும் 3 மகள்களும் இருக்கின்றனர்,மகன் ஒருவர் உழைப்பிலும் ,
எனது உழைப்பிலும் குடும்பம் சீவித்துக் கொண்டு இருக்கின்றது, எனது மகள் 10 வது
சித்தியடந்த நிலையிலும் படிக்க வைக்கமுடியாத நிலையில் எனது குடும்ப சுமை
இருக்கின்றது. இருக்கும் மிகுதி பிள்ளைகளையாவது படிப்பித்து அவர்களுக்கு நல்லவழியை
காட்டவேண்டும் என்ற ஆசையில் இன்னொரு மகன் அருகில் உள்ள சிலிண்டர் குடோனில்
வேலைக்கு சேர்ந்திருக்கின்றான், எனது வேலை நேரம் தவிர இந்த குழுவின் மூலம் எங்கள்
பகுதியில் ஆற்றும் செயற்பாடுகளுக்கு துணைநிற்பேன் , தலைவி அவர்களுடன் சேர்ந்து
நானும் எல்லா இடங்களுக்கும் சென்று பொது விடையங்கள் சம்மந்தமாக பேசுவோம் என்று
கூறி முடித்தார்.
அடுத்து புஸ்பராணி தொடர்ந்தார், எனக்கு வயது 27, நான் B.Ed
முடித்திருக்கின்றேன், எனக்கு ஒரு மகன் இருக்கின்றான், தற்போதுதான் 1வயது. கணவர்
இப்போது என்னுடன் இல்லை அம்மா உழைப்பில்தான் எங்கள் குடும்ப வாழ்க்கை போய் கொண்டு
இருக்கின்றது, அம்மா கொத்தனார் கூலியாகவும், விவசாயக்கூலியாகவும் கிடைக்கும்
வேலைக்கு சென்றுவருகின்றார். நான் வீட்டில் சமைத்து அம்மாவுக்கும் எனது
மகனுக்குமுரிய வேலைகளைச் செய்துவிட்டு மாலை நேரத்தில் இங்குள்ள 1 முதல் 12 வது வரை
படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இலவசமாக படிப்புச் சொல்லிக் கொடுக்கிறேன்,
இதற்காக எந்த பெற்றோரிடம் இருந்தும் நான் காசு வாங்குவதில்லை கற்ற கல்வியை பயனுள்ள
முரையில் பயன்படுத்தவேண்டும் என்ற முறையில் இதனை செய்து வருகின்றேன், இந்த
குழுவில் இணைந்த பின்பு என் மாலை நேர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 40
ஆக இருக்கின்றது. படிப்பதற்கு கஸ்டப்படும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த இந்த
உதவியினை தொடர்ந்து செய்துவருவேன், என்னோடு என் குழு கூட இருக்கின்றது என
கூறிமுடித்து ஆச்சரியப் படுத்தினார்.
தொடர்ந்து பத்மா பேசினார் எனக்கு ஒரு பெண் பிள்ளையும் ஒரு
மகனும் இருக்கின்றனர் மகன்12 வது படிக்கிறான், மகள் 11 படிக்கிறாள், கணவர் Paint
வேலை பார்க்கிறார், எனது குடும்பத்தை கவணிப்பதோடு இந்த குழுவின் உறுப்பினராக கடந்த
ஒரு வருடமாக செயற்பட்டு வருகிறேன், நானும் என் குழுவில் இருக்கும் நிர்மலாவும்
சேர்ந்து எங்கள் பகுதியில் இயங்கிவரும் பங்காரு அம்மையார் காப்பகத்தில் கடந்த 10
வருடங்களாக சமையல் வேலை செய்துவருகிறோம் ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பே நிதி
உதவி இல்லாமல் அவர்கள் அதனை நிறுத்திவிட்ட போதும் இப்போதும் அங்கு பிள்ளைகள்
வருகின்றனர் அதனால் நாங்கள் இருவரும் அவர்களை பராமரித்து உணவு சமைத்து கொடுத்துவருகின்றோம்,
அதற்கான செலவுகள் எல்லாமே எங்கள் பகுதியில் கிடைக்கும் நிதியினை வைத்துதான் செய்து
வருகிறோம் , இதுவரை சம்பளம் என்று எதுவும் பெறவில்லை எங்களை நம்பி அனுப்பி
வைக்கும் இந்த சிறுவர்களை பராமரிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கூறினார்.
அடுத்து தொடர்ந்தார் நிர்மலா எனக்கு 4 பையன்களும் 1 பெணும்
இருக்கின்றனர், பத்மா அக்கா கூறியதைப் போன்று நான் இங்கு செயற்பட்டு வரும் பங்காரு
அம்மையார் குழந்தைகள் காப்பகத்துக்கு சமையல் உதவியாளராக இருக்கின்றேன். தற்போது 25
குழந்தைகள்வரை இங்கு இருக்கின்றனர், அனைவரும் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள்,
காலையில் இருவரும் சென்று அவர்களுக்கு உரிய வேலையினை செய்து முடித்துவிட்டு இங்கு
வந்து எனது குழந்தைகளுக்கும் வேலைகளைச் செய்துகொடுப்பேன், அத்தோடு எங்கள் குழுவின்
மூலம் செய்துவரும் எல்லா பொதுக் காரியங்களிலும் அவர்களோடு சேர்ந்து செயற்படுவேன்.
இது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது எனக் கூறி முடித்தார்.
அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் வெண்மதி , எனக்கு 26 வயது
எனக்கு 2 மகன்கள் இருக்கின்றார்கள், மூத்த மகன் 5வதும் இளையமகன் 2வதும்
படிக்கின்றனர்,எனது கணவர் விவசாயத்திற்கு தினக்கூலியாக செல்கின்றார், நான்
வீட்டில் இருக்கின்றேன் என்னிடம் 2 பசுமாடுகள் உள்ளன இதனை வைத்து இப்பகுதியில்
பால் விற்று வருகின்றேன், இந்த குழுவில் இணைந்த பின்பு இவர்களைப் போல நாணும்
எதாவது ஒரு பணியினை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன், பின்பு இங்கு சத்துக்
குறைந்த சிறுவர்கள், மற்றும் பெண் பிள்ளைகளுக்கு மாலையில் என்னிடம் இருக்கும்
பசும்பாலில் ஒரு பகுதியை காய்ச்சி இவர்களை வீட்டுக்கு வரவளைத்துக் கொடுப்பேன்,
தற்போது 5 சிறுவர்களும் 4 வளர் இளம் பெண்களும் வந்து செல்கின்றனர் எனக் கூறி
ஆச்சரியப்படுத்தினார்.
இப்படியாக தொடர்ந்த அவர்களது அறிமுகத்தில் அடுத்து உஷாராணி
தொடர்ந்தார் எனக்கு 3 பெண் பிள்ளைகளும் 1 பையனும் இருக்கின்றனர் ஒரு பெண் ஆசிரியர்
பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார் ஒருவர் 11 வது படிக்கிறார் ஒரு பெண் நர்சாக
கம்மாபுரத்தில் பணிபுரிகிறார், எங்கள் பகுதியில் உள்ள பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை
மற்றும் சுகாதாரம் சம்மந்தமான விசயங்களை எடுத்துக் கூற நாங்கள் அவரை அழைத்துவந்து
வீட்டுக்கு வீடு சென்று பேசுவோம், இங்குள்ள வளரிளம் பெண் பிள்ளைகளுக்கு என் மகளை
வைத்து மருத்துவம் மற்றும் பெண்பிள்லைகளின் சுகாதாரம் பற்றி பேசவைப்போம்.,
இப்போதும் இங்குள்ள கர்ப்பினிப் பெண்களுக்கு தேவையான மருத்துவ சேவையினை என் மகள்
செய்து வருகின்றார் ஆனால் அவர் பணிபுரிவது வேறு இடத்தில் நானும் இந்த குழுவில்
இருந்து எல்லா வகையான பொது விடையங்களிலும் ஈடுபட்டு வருகின்றோம் எனக்கூறி
முடித்தார்.
அடுத்தடுத்து அமுதவள்ளி, அம்பிகா, மல்லிகா, சரஸ்வதி,
பாப்பாத்தி என தொடர்ந்தது அவர்கள் அறிமுகம் இவர்களும் அவர்களைப் போன்று சாதாரண
நிலையில் இருந்து கொண்டு தங்களால் ஆன சேவைகளை செய்து வருகின்றனர். புஸ்பராணியுடன்
இணைந்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் சரஸ்வதி, வீடு வீடாக சென்று பள்ளிக்குச்
செல்லாத பிள்ளைகளைப் பற்றிய விபரங்களைத் திரட்டி அவர்களது குடும்பத்தினருடன்
பேசும் மல்லிகா, என அவர்களது செயற்பாடுகள் நீண்டுகொண்டு போனது…
எல்லோர் பேச்சினையும் கேட்டு முடித்த பின்னர் அவர்கள் ஓவொருவர்
மீதும் அளவிடமுடியாத மரியாதை மனதில் குடிகொண்டது, வெற்று விளம்பரங்களுக்கா தாம்
செய்த சேவைகளை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் போடும் பிரபலங்கள் மத்தியில்
கிட்டத்தட்ட இந்த ஊரினை தத்து எடுத்தவர்கள் போன்று இவர்கள் ஆற்றிவரும் இந்த பணிகள்
உண்மையில் அளப்பரியதே நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஊருக்காகவே ஒரு விதமான
எதிர்பார்ப்பும் இல்லாமல் செயற்பட முடியும் என்ற கருத்துத்தான் மனதில் ஓடிக்கொண்டு
இருந்தது. அவர்கள் எல்லோரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை இப்படியான
குழுக்கள் கிராமத்துக்கு ஒன்று இருந்தாலே போதும் நம் தேவைகளுக்காக அடுத்தவர்களை
நாடி நிற்கவோ அல்லது பிரச்சனைகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்றோ இருக்க
வேண்டியதில்லை உண்மையில் இவர்கள் போன்று இன்னும் பல குழுக்கள் இப்பகுதியில் இயங்க
முன்வர வேண்டும் என்று கூறி முடித்தேன்.
இறுதியாக அப்பகுதியில் தன்னார்வ தொண்டராக பணியாற்றி வரும்
தங்கமணி பேசினார் எங்கள் பகுதியில் குழுவினை ஆரம்பிக்க வேண்டும் என்று அருள்தேவன்
அவர்கள் கூறிய போது உடனடியாக இங்கு யாரும் தயாராக இருக்கவில்லை காரணம் அனேகமான
பேர் பல்வேறு நிறுவனங்களின் குழுக்களில் முன்னரே இணைந்திருந்தனர். பின்னர் இது
பற்றி நானும் இந்த குழுவின் தலைவியாக இருக்கும் கொளஞ்சியம்மாள் அவர்களும் அடிக்கடி
பேசிக் கொள்வோம் அப்போதே நமது குழு மற்றவர்களிடத்தில் இருந்து வேறுபட்டவர்களாய்
இருக்க வேண்டும் என்ற ஆசை இருவர் இடத்திலும் இருந்தது அதன்பின் ஒன்றானவர்கள்தான்
இந்த குழு உறுப்பினர்கள். இவர்களை ஒருங்கிணைத்த நோக்கத்தினை நோக்கிச் சென்று
கொண்டு இருக்கின்றோம் ஆனால் அவர்களுக்குரிய பொருளாதார ரீதியான உதவிகள் இன்னும்
கிடைக்கவில்லை என்பதுதான் எனது கவலையாக இருக்கின்றது. இப்போதுவரை அவர்கள் தமது
சொந்த சேமிப்பினை வைத்து அவர்களுக்குள் கடனுதவிகள் கொடுத்துக் கொள்கின்றனர்.
இவர்களுக்கு அரசின் மூலமோ அல்லது நிதி நிறுவனங்களின் மூலம் கிடைக்கும்
கடனுதவிகளைப் பெற்றுக் கொடுக்க நானும் அருள்தேவன் இருவரும் முயன்றுவருகின்றோம்,
இந்த குழுக்களை Skills India மேலும் வளர்த்தெடுக்கும் பணியிணை செய்யவேண்டும்
என்பதே எனது ஆசை எனக் கூறிமுடித்தார்.
இறுதியாக குழுவின் தலைவி கொளஞ்சியம்மாள் பேசினார். எங்கள்
பகுதியில் இருக்கும் எல்லோர் மத்தியிலும் எங்கள் குழு பற்றி ஒரு நல்லெண்ணம்
இருக்கின்றது. பலர் எங்கள் குழுவினையும் குழு உறுப்பினர்களையும் நேரடியாகப்
பாராட்டியிருக்கின்றார்கள், எங்கள் குழுவினைப் போல் ஆரம்பிக்க பலருக்கும் ஆர்வம் இருக்கின்றது,
இதனை முன்னெடுத்துச் செல்ல Skills India
முன்வரவேண்டும், அதே போல் பொருளாதார ரீதியாக எங்கள் குழு
முன்னேற்றத்துக்கும் துணை நிற்க வேண்டும் எனக் கூறி முடித்தார்.
வெறும் கடன்களைக் கந்து வட்டிக்கு பெறுவது போன்று
செயற்பட்டுவரும் சுய உதவிக் குழுக்களுக்கு மத்தியில் இவர்களைப் போன்று
செயற்பட்டுவரும் குழுக்கள் ஆச்சரியத்தையும் குழுக்கள் ஆரம்பிக்கப்படுவதன் நோக்கம்
நிறைவு பெறுவதாய் எண்ணத்தோன்றுகிறது. இவ்வாறான குழுக்கள் ஊருக்கு ஒன்று
உருவாக்கவேண்டும், மக்கள் அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்க்க பழக்கப்படுத்தவேண்டும்.
இதுதான் இந்தியாவின் திறனை வளர்க்கும் செயலாக அமையும் அதை செய்ய Skills India வின்
முயற்சிகள் தொடரும்.,,,,,,,,,