Tuesday 28 August 2012

எனக்கும் கல்வி வேண்டும் - ஒரு மாணவனின் உரிமைக் குரல்


கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை.

இந்த வறுமைதான் பல கிராமங்களில் பிள்ளைகளின் கல்வியினை பாதிக்கச் செய்யும் நோயாக இருக்கின்றது. இந்த பதிவு ஒரு மாணவனைப் பற்றியது. காலையில் புத்தகப் பையுடன் செல்ல வேண்டியவனின் வாழ்க்கை குப்பை எடுக்கும் பையுடன் மாறவைத்த நிகழ்வின் தொகுப்புத்தான் இந்த பதிவு இலவசங்களை மட்டும் வாரி வழங்கிவிட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்ற மாயையை உடைத்தெறியும் ஒரு பதிவு.

அதிகாலை 4 மணி ஆள் அரவம் இல்லாத அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதினில் தோளிலே கோணிப் பையுடன் கடற்கரையை நோக்கி நடை போட்டுச் செல்கின்றது இரு உருவங்கள் இவர்கள் மீன் விற்பனை செய்பவர்கள் அல்ல, மீனவர்களுக்கு உணவுவழங்கச் செல்பவர்களும் அல்ல காலை வேளையில் கடற்கரையோரம் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி எடுப்பதற்காக செல்லும் ஒரு தாயும் மகனும்.

விஜி
விஜி. கடந்த வருடம் 7 வது படித்த மாணவன் பரங்கிப் பேட்டை ஒன்றியத்தில் கிள்ளை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கலைஞர் நகர்தான் இவனது சொந்த ஊர். ஆழிப் பேரலையின் அனர்த்தத்தின் பின்னர் நிறுவனம் ஒன்றினால் கட்டிக்கொடுக்கப் பட்ட வீட்டில் வாழும் இவனது குடும்பத்தில் தற்போது 3 சகோதரர்கள் அம்மா அப்பாவோடு 6 பேர் வசித்து வருகின்றனர், ஒரு அக்கா 17 வயது ஆகும் முன்பே திருமணம் முடித்து வேறு வீட்டுக்கு சென்று விட்டார். இப்போது இருக்கும் இந்த 4 பையன்களும் முறையே 13,12, 8, 6 வயதை உடைய பள்ளி செல்லும் சிறுவர்கள் 2 வருடங்களுக்கு முன்னால் வரை சாதாரண ஏழைக் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சியோடு பள்ளி சென்றுவந்த இந்த குடும்பத்தில் இன்று வறுமை தாண்டவம் ஆடுகின்றது, காரணம் உழைப்பினை வழங்கும் இருவரும் நோயினில் வீழ்ந்ததுதான்.

விஜி யின் அப்பா ஒரு நாள் கூலிக்காக வரப்பு வேலை செய்யும் தொழிலாளி கடந்த 2வருடத்துக்கு முன்பு வரை நன்றாக தனது கூலி வேலையினப் பார்த்து தன் குடும்பத்தின் செலவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உடலில் நெஞ்சுவலி வந்து இன்று பலமான வேலைகள் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றார், இருந்தும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தடவை வேலை பார்க்கச் சென்ற போது வரப்பில் இருந்து நெஞ்சுவலியால் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்தவரை வீட்டில் கொண்டுவந்து சேர்த்தனர் கூட வேலை செய்யும் தொழிலாளிகள்.ஆனால் இன்று வரை வைத்தியசாலையும் கையுமாக திரிந்தாலும் இடையிடையே கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளுக்கு சென்று வருகின்றார் விஜியின் அப்பா.

விஜியின் அம்மா 
இந்த 2 வருடங்களின் பின்னரான வாழ்க்கைச் செலவுகள் அவர் மனைவி கையில் வந்துவிட அவருக்கு தெரிந்தது இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பொறுக்கி அதனை எடை போட்டு விற்பதுதான் இந்த அற்ப வருமானத்திலேதான் இன்று இவர்கள் குடும்ப நிலை போய்க் கொண்டு இருக்கின்றது இத்தனைக்கும் இவரும் உடல் ஆரோக்கியமானவர் அல்ல அவருக்கும்  வலிப்பு நோய் இருக்கின்றது, இவரால் பகலில் வீட்டை விட்டு வெளியிலே செல்லமுடியாத நிலை வெயில் அதிகமாக பட்டுவிட்டால் வலிப்பால் கீழே விழுந்து அழுத்த தொடங்கி விடுவார். இந்த நிலைதான் இவரது தொழில் செய்யும் நேரதை காலை 3.00 மணியில் இருந்து 7.00 மணிக்கு முன்னராக முடித்து விடுகின்றார் இந்த நேரத்தில் இவருக்கு எதுவும் வலிப்பு வந்துவிடாமல் இருக்கவும், பகல் நேரத்தில் இவரை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்க வேண்டிய நிலை விஜிக்கு,,,

கடந்த வருடம் வரை நன்றாகப் படித்து வந்த விஜியினால் இன்றைய சூழ்நிலையில் பள்ளிக்குப் செல்ல முடியவில்லை. கல்வியின் ஆசை இன்னும் அவனுக்கு கரைந்து போக வில்லை அவனது அண்ணனின் பாடப் புத்தகங்களை வீட்டிலிருந்து கல்விக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த மாணவனது வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்ற கவலை இன்னும் அவன் தாய் முகத்தில் இருக்கின்றது.

விஜியின் அண்ணன் மணிகண்டன்
இவரது மூத்த மகன். பெயர் மணிகண்டன், தற்போது கலைஞர் நகர் நடுநிலைப் பள்ளியில் 8 வது படித்துக் கொண்டிருக்கும் மாணவன். இவனது படிப்பும் குளப்பமாகி விடக் கூடாது என்ற ஏக்கத்தில் இருக்கும் இவனது பெற்றோர்  இருக்கின்ற எல்லா கஸ்ட நிலைகளையும் தாண்டி பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு 8 வது படிக்கும் இந்த மாணவனுக்கு இருக்கும் குடும்ப பொறுப்புக்கள் ஏராளம்.  விஜியின் அம்மாவுக்கு அடுப்படியில் இருக்கமுடியாத நிலை, அவர் உடலில் வெப்பம் பட்டுவிட்டால் அடுத்த நிமிடம் வலிப்பு நிலைக்கு சென்று விடுகின்றார் அதனால் சமையல் வேலை எல்லாம் மகேந்திரனின் கையில்தான்.

உணவு தயாரிப்பில் மணிகண்டன்
 காலையில் எழுந்து எல்லோருக்குமாக உணவு சமைக்கும் வேலையில் ஆரம்பித்து விடுவான் மணிகண்டன் சாதம் வடித்து எதாவது காய்களையோ, அல்லது அவனது தம்பி கடற்கரையில் இருந்து வரும்போது கொண்டுவரும் சின்ன சின்ன மீன்களை வைத்து எதாவது சமைத்து வைத்து அவனும் சாப்பிட்டு தம்பிகள் இருவருக்கு சாப்பாடு கொடுத்து அவர்களையும் குளிக்கவைத்து பள்ளிக்கு செல்லத் தயார் படுத்தி அவனுடன் அழைத்து செல்வது. பின்பு மாலை பள்ளி விட்டு வந்து அவனது துனியில் இருந்து வீட்டில் இருக்கும் எல்லோர் துனிகளையும் துவைத்துப் போடுவது, ஒரு நாளுக்கு பின்னர் மாற்றி உடுப்பதற்குரிய மாற்றுத் துணி அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் இந்த வேலை அவனுக்கு வாடிக்கையானதே. அதன் பின்னர் வீட்டு வேலைகள் எல்லாம் செய்து இரவு உணவுக்காக் சாதம் வடித்து வைப்பான அவனது அப்பாவும் வந்த பின்னர் இருவரும் சேர்ந்து ஏதாவது  சமையலைச் செய்து அவர்கள் குடும்பத்தோடு சாப்பிடுகின்றனர்.
விஜியின் குடும்பம்

ஒரு அழகான குடும்பம் 4 ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பின்னாட்களில் நன்றாக வாழப் போகும் குடும்பந்தான் ஆனால் அவர்கலின் தற்போதைய நிலை மோசமானதாக் இருக்கின்றது. குழந்தைகள் கல்வி கற்பதற்கான உரிமை என்ற பேசுகின்றோம் அந்த உரிமை கிடைப்பதற்கான வழியினைச் செய்ய அரசால் முடிய வில்லை. இந்த சந்திப்பின் பின்னர் அவர்களது நிலை பற்றி விஜியின் தாய் பேசினார் . எங்கள் குடும்பம் குடிசை போட்டு இங்கு வாழ்ந்து வந்த காலத்தில் கூட எனது கணவர் மீன் பிடி வேலைக்கு சென்று நன்றாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தோம் இன்றைய நிலையில் சுனாமிக்குப் பின்னரான கட்டிக் கொடுக்கப் பட்ட வீட்டில் இருந்து வந்தாலும் அதனில் இருப்பதற்கான எந்த வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்றோம் சுனாமியின் போது கொடுத்த வலை வள்ளங்கள் தானே புயலில் சென்று விட்டன அதன் பின்னரான இழப்பீடுகள் இன்னும் கிடைக்க வில்லை.  உடல்நிலை முடியாத நிலையில் என்னாலும் என் கணவராலும் வேலைக்கு செல்ல முடியாத நிலை. என்  உடல் நலக்குறைவினால் என் ஒரு பிள்ளை காலையில் என்னுடன் தொழிலுக்கு வருவதும் இன்னுமொரு பிள்ளை இங்கு வீட்டு வேலைகள் செய்வதும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்னால் பகலில் வீட்டை விட்டு வெளியில் வந்து ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன். அத்தோடு கஸ்டமான வேலைகள், நெருப்பின் அருகில் இருந்து பார்க்கும் வேலைகள் என எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எனது குடும்பத்தில் என் பிள்ளைகள் படும் கஸ்டத்தினை பார்த்து தினம் தோறும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எனது குடும்ப நிலையினை அறிந்து என் குழந்தைகள்  எல்லோரும் நல்ல முறையில் கல்வி கற்க செய்ய எனக்கு ஒரு வாழ்வாதாரத்துக்கான வழியினைக் காட்டுங்கள். இதனையே இங்கு பணி புரியும் உங்களையும், எங்கள் பகுதியில் அரச அதிகார்கலையும் கேட்கின்றேன் எனக் கூறி முடித்தார்..

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம் என்ற அண்ணா.. அதற்கான வழி அவனுக்கு கல்வியைக் கொடுப்பதால்தான் என்பதைக் கூறாமல் சென்றதுதான் தவறு அதனால்தான் ஆட்சிக்கு வரும் அனைத்துக் கட்டியும் இலவசங்களைக் கொடுத்து சிரிக்க வைக்கப் பார்கின்றார்கள் அவர்களால் சிரிப்பைக் காண முடிவதில்லை. அதை விடுத்து ஒரு குழந்தை கல்வி கற்பதில் தடையாய் இருக்கும் அந்த குடும்ப நிலையின் சூழலை மாற்றுங்கள் எல்லா குழந்தைகளும் சிரிப்பார்கள்.
     

Monday 27 August 2012

The Girls need of this day-Promoting Health and Hygiene life for Better Future


Adolescent Girls Health Program
Training Programme for Master Trainers (TOT) on Personal and Menstrual Hygiene for Adolescent Girls

State level training for Master Trainers (TOT) on Personal and Menstrual Hygiene Practices for Adolescent girls.


”The adolescent girl still remains a young plant that neither gets light nor water. She remains
the flower that could have blossomed but didn’t…..”
Kamla Bhasin from “Our Daughters”
Background
Adolescent refers more broadly to the phase of human development encompassing the transition from childhood to adulthood. In terms of age, it is the period of life that is extended from 10-19 years, which includes pubertal development also. This period is very crucial since these are the formative years in t life of an individual when major physical, psychological and behavioral changes take place
Girls up to the age of 19 comprise about one-quarter of India’s population. For young girls in India, poor nutrition, and early childbearing and reproductive health complications compound the difficulties of adolescent physical development.
On average, most adolescent girls in India have little knowledge of menstruation, sexuality and reproduction. Large numbers of rural and urban populations believe that menstruation contaminates the body and makes it unholy. As a consequence, the girl often sees herself as impure, unclean and dirty. According to the Nutrition Foundation of India, the average age of menarche is 13.4; yet 50% of girls aged 12-15 do not know about menstruation. This is true for rural as well as the urban poor. The lack of information can be attributed to a veil of secrecy that surrounds menarche.
Anemia is one of the primary contributors to maternal mortality (20-25%) and is associated with compromised pubertal growth spurt and cognitive development among girls aged 10-19. Nutritional deprivation, increased iron demand for adolescent growth, excessive menstrual losses of iron and early/frequent pregnancies aggravate and exacerbate pre-existing anemia and its effects. Most girls are not adequately aware of their increased nutritional needs for growth (especially increasing their food intake to meet calorie demands of pubertal growth), resulting in girls that are underweight and of short stature. The poor nutritional status of these adolescent mothers heightens obstetric risk during pregnancy and childbirth, contributes to maternal mortality, and puts their infants at risk. Neonatal and infant mortality rates among adolescent mothers are 60% higher than among infants born to mothers in the 20-29 age groups.


Fifteen percent of ever-married adolescent girls are stunted; 40% have a body mass index below 18.5, and 20% have moderate or severe anemia.                (CEDPA Report., 2011)



 
 

Skills India-Profile
Skills India is a developmental and not for profit organization working towards ensuring meaningful education and better livelihood opportunity  to disadvantaged and marginalized section of the society.
Our Women empowerment programs focus on integrating the economic, social and political well being of women and strive to make them aware, empowered, capable and self reliant.
State level training for master trainers (TOT) on personal and menstrual hygiene practices for Adolescent girls.
In India, school systems are ambivalent about imparting sex education. Even in some schools where sexual and reproductive health education exists in the curriculum, teachers are often too embarrassed and uncomfortable to effectively instruct. This results in the lack of knowledge about the process of reproduction and menstruation and leads to a greater health problem in our country. The solution to this problem lies in imparting the knowledge of menstrual management and reproductive hygiene to adolescent girls.
In this context Skills India organized workshop cum training programme for master trainers on menstrual hygiene management. Training was imparted to NGO workers, teachers, health activists and other volunteers from diverse backgrounds.

A view of inauguration of the workshop -we taken a vision to give this knowledge to  100000 Adolescent girls in Tamil Nadu

       
The Session Inauguration
The workshop imparted them with knowledge and confidence to educate the in school and out of school adolescent girls in their neighborhood on menstrual hygiene and management. Representatives from twenty two districts of Tamil Nadu including Coimbatore, Erode, SSalem, Ariyalur, Kanchepuram, Perambalur, Sivaganga, Ramanathapuram, Dindukal, MaduraiCuddalore, Vilupuram, Vellore, Nilgris and Namakkal participated in the training programme. The training programme discussed the such as Physical and physiological changes during adolescence, the prevailing myths regarding menstruation  the menstrual hygiene, the relation between good menstrual practices and healthy living and methods of using and disposing sanitary napkins and good food habits. Through this network of NGOs and trained volunteers Skills India aims impart the menstrual management training and improve the livelihood, sanitation and health indices of one lakhs  adolescent girls by the end of the year 2012.


   
The session in progress: Experts from diverse fields trained the participants

Participants in discussion: Group activity is an integral component
 of the training Programme 
 
Participants in Action....
  

Thursday 23 August 2012

மாற்றத்தை விரும்பும் மகளீர் குழு... இவர்கள் மற்றவர்களை விட சற்று மாறுபட்டவர்கள்


வீட்டுவேலை,குடும்பம்,பிள்ளைகள் கல்வி, ஒரு பக்கமும் நகரவிடாமல் இருக்கவைக்கும் சீரியல்கள் என்பன இன்றைய பெண்களை இறுக்க கட்டி வைத்திருக்கும் கயிறுகள் இதைத்தாண்டி ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்து பெண்கள் பொதுவேலை, தொண்டுகள் என இறங்கிவிட முடியாது அப்படி இறங்கிய பெண்களுக்கு பின்னால் எல்லாம் குறைவில்லாத செல்வம் அல்லது எல்லோருக்கும் தெரிந்த பிரபலங்களின் மனைவி என்ற அந்தஸ்து இருப்பதால்தான் செயற்பட முடிகின்றது. எனக்கு தெரிந்து முகேஸ் அம்பானி மனைவி, மற்றும் சுகாசினி மணிரத்தினம் போன்றோரைப் போல… இவர்களைப் போல் இல்லாமல் ஒரு அன்றாட தேவைகளை நிறைவு செய்யப் போராடும் பெண்களும் பொது வாழ்வில் ஈடுபட முடியுமா என்ற வினாவுக்கு ஒரு நகர புறத்தில் வாழும் இவர்கள் விடையளித்தார்கள்…. அந்த சுவாரசியமான சந்திப்புத்தான் இந்த பதிவு.

சிலர் மட்டும் தங்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்கின்றார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் இருந்துவிட்டு போவது எல்லோருக்கும் பிடித்தமானது அல்ல  தங்களுக்குள் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வருவதற்கு முனைதல், ஏழ்மையோடு இருந்துகொண்டே பிறரின் துயரம்போக்க பாடுபடுதல் இவ்வாறான எண்ணங்கள்தான் நல்ல தலைவர்களையும் வழிகாட்டிகளையும் நம் தேசத்துக்கு தந்திருக்கின்றது. இங்கு குறிப்பிடபோகும் பெண்கள் சரித்திர நாயகர்கள் என்றோ அல்லது இவர்களைப் போல யாரும் இதுவரை செய்யவில்லை என்றோ கூறுவதற்கான பதிவு அல்ல இது, கிராமத்துக்கு கிராமம் இப்படியானதொரு கூட்டம் இருக்க வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு, ஒரு வேளை இப்படியாக செயற்படுபவர்கள் உங்கள் தெருக்களிலும் இருக்கலாம் அப்படியிருந்தால் அவர்களை வெளி உலகத்துக்கு தெரிய வைக்கின்ற மகிழ்ச்சிதான் இந்த பதிவு

குழு பற்றிய ஓர் அறிமுகம்
 சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட  நகர்புறபகுதியான சிவசண்முகம் தெரு 1வது வட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து வாழ்வாதரத்துக்கு வழிதேடி வந்த சுமார் 150 குடும்பத்தினர் இருக்கின்றனர். விவசாய தினக்கூலி, நகரப்பகுதியில் சுமைத்தொழில், கம்பனிகளில் கொடுக்கப்படும் தினசரி கூலிவேலையென பல்வேறு பகுதிகளில் தினசரி வாழ்க்கைக்கு வழிதேடும் இவர்களுடன் சென்ற வருடம் Skills India கைகோர்த்துக்கொண்டது. இப்பகுதியினுள் பணிபுரிவதற்காக நமது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் சென்றபோது முதலில் சந்தித்தது தங்கமணி என்கின்ற 28 வயது இளைஞர் M.Sc, B.Ed முடித்துவிட்டு ஒரு தனியார் வங்கியில் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் பொறுப்பில் இருக்கின்றார். ஊரில் விரல் விட்டு எண்ணக்கூடிய படித்த இளைஞர்களில் ஒருவர், தானாக முன்வந்து இந்த சமுகத்துக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என நினைத்து செயற்படும் இவர் தன்னையும் நம் செயற்பாடுகளோடு இணைத்துவிட்டார். இவரின் உதவியுடனும் அங்கிருக்கும் பெண்கள் சிலரும் சேர்ந்து இங்கு நமது நிறுவனத்தின் உதவியுடன் ஒரு மகளீர் குழுவினை அமைக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தினை கூறிய போது அதற்கு சரியானதொரு விடை கிடைத்ததாகவே படவில்லை அருள்தேவனுக்கு காரணம் அங்கு பல குழுக்களை பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் அரசின் சார்பிலும் அமைத்து கடனுதவிகளைக் கொடுத்து வருகின்றனர், இதன் காரணமாக தற்போதய சூழ்நிலையில் நம்முடன் குழுவில் சேர யார்வருவார்கள் என்ற ஐய்யப்பாடு இருவர் மத்தியிலும் இருந்தது. இதனை பேச்சு வடிவிலே வைத்திருந்த ஓரிரு மாதத்தின் பின்னர் தங்கமணியிடம் இருந்து அழைப்பு வந்தது அருள்தேவனுக்கு; நமது பகுதியில் உங்களது நிறுவனத்தின் உதவியோடு செயற்பட ஒரு குழு உருவாக்கி வைத்திருக்கின்றேன் வாருங்கள் என அழைத்திருந்தார். அழைப்பினை ஏற்று சென்று முதல் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் அருள்தேவன் அவர்கள் கடந்த 11 மாதங்களாக இப்பகுதியில் செயற்பட்டுவரும் இக்குழுவினைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை அழைப்பினை விடுத்திருந்தார் அருள்தேவன் கடந்த 2ம் தேதி அங்கு செல்ல நேர்ந்த போது அவர்களை பார்வையிடுவதற்காக கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார். குழுவில் இருந்த 12 உறுப்பினர்களும் தன்னார்வ தொண்டர் தங்கமணியும் வந்திருந்தனர்.

சம்பிரதாயங்களுடனான அறிமுகங்களின் பின்னர் குழுவின் தலைவி அவர்கள் பேச ஆரம்பித்தார். எனது பெயர் கொளஞ்சியம்மாள், வயது 48 எங்களது குழுவின் பெயர் இமானுவேல் மகளீர் குழு. கடந்த 2011 செப்டம்பர் மாதம் சிவசண்முகம் தெருவினை மைய்யமாக வைத்து இந்த குழுவினை ஆரம்பித்தோம். தம்பி தங்கமணியினதும், Skills India தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு.அருள்தேவன் அவர்களது வழிகாட்டுதலின் பேரிலும் இந்த குழுவினைச் செயற்படுத்தி வருகின்றோம். இதை ஆரம்பித்தது முதற்கொண்டே சாதாரண சுய உதவிக் குழுவினைப்போன்று செயற்படக் கூடாது என்ற ஆசையும் மற்றவர்களைப் போல கடன் உதவியை வாங்கிக் கொண்டு மாதாமாதம் தவணை கட்டும் முறைசார்ந்ததாக இல்லாமல் சமுகத்தின் நலனுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற அக்கறையும் எங்கள் குழுவினருக்கு இருந்தது இதற்கு உறுதுணையாக தவமணியும், அருள்தேவன் அவர்களும் எமக்கு வழி காட்டினர் அவர்களோடு சேர்ந்து இவ்வாறு சமுகத்தின் பேரில் அக்கறையுடைய குழு உறுப்பினர்களை எங்கள் பகுதியில் இருந்து தேர்ந்து எடுத்தோம். எங்கள் குழுவின் சார்பாக பொதுநலனைக் கருதி செய்யும் செயற்பாடுகளைத்தவிர ஒவ்வொருவரும் தனித்தனியாக பல்வேறு சமூகநலன் பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த குழுவினை இப்பகுதியின் பெண்களின் சமுக மேம்பாட்டுக் குழுவாக மாற்றி அமைத்தோம். எங்கள் குழுவானது இப்பகுதியில் எவ்வாறான செயற்பாட்டினை ஆற்றுகின்றது என்பதை இக்குழுவின் துணைத்தலைவி அவர்கள் கூறுவார்கள் எனக் கூறிமுடித்தார். அவரது ஆரம்ப உரையிலும் அவர்கள் அந்த சமுகத்தின் மீது அக்கறை கொண்டு செயற்படும் நோக்கத்தையும் கூறிய போது ஆச்சரியமும், ஆவலும் மேலோங்கி நின்றது. அந்த ஆவலுடன் அவரது பேச்சினைக் கேட்கத் தயாரானேன்.

குழுவின் செயற்பாடுகள்
எனது பெயர் B.அம்சவள்ளி இந்த குழுவின் துணைத்தலைவியாக இருக்கின்றேன். எங்கள் குழுவானது இந்த ஊர்மக்களின் குறைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு அமைப்பாகவும், மக்களின் பொதுவான பிரச்சனைகளை எடுத்து ஆராயும் குழுவாகவும் செயற்படவேண்டும் என்ற நோக்கில் செயற்படுத்த ஆரம்பித்தோம். ஆரம்பித்தது முதற்கொண்டு இருந்துவரும் அடிப்படை பிரச்சனைகளை எடுத்து செயற்பட முடிவு செய்தோம். முதலில் எங்கள் தெருவுக்கு நாங்கள் குடிவந்தது முதல் தெருவிளக்கு அமைக்கப்படாமலே இருந்து வந்தது, இதனை பெற்றுதரவேண்டும் என்பதினை முதற்செயற்பாடாக கருதி அதற்காக யார்யாரை சென்று பார்க்கவேண்டும் என்ற விபரங்களை எல்லாம் திரட்டினோம். மின்சாரவாரியம், நகராட்சி, பகுதி MLA என ஒருவர் விடாமல் அனைத்து பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மனுவினை குழுவின் சார்பாக கொண்டு கொடுத்து வந்தோம். உடனடியான செயற்பாடுகள் ஆரம்பிக்காவிட்டாலும் மறுபடியும் மறுபடியும் நாங்கள் சென்று பார்த்த போது ஒரிரு மாதங்களுக்குள் எங்கள் பகுதியில் தெரு விளக்கு அமைக்கப் பட்டது. இதுதான் எங்கள் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி.ி

இதன் பின்னரான செயற்பாடுகளாக குடிநீர் குழாய்கள் சரிவர எல்லா பகுதிகளிலும் இல்லாமல் இருந்தது அதனை சரி செய்யவும் ஒரே இடத்தில் எல்லோரும் தண்ணீர் பிடிக்கும் அவலத்தையும் எடுத்து சென்று பேசி ஒவ்வொரு தெருவுக்கும் குடிநீர்குழாய் அமைக்கச் செய்தோம்,நாங்கள் இருக்கும் பகுதி தாழ்வானது மழைகாலங்களில் இருப்பிடங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துகொள்ளும், அத்தோடு மட்டுமில்லாமல் தெருக்கள் எல்லாம் பழுதடைந்து சென்றுவர முடியாமல் இருக்கின்றது இதற்கு ஒரு காங்க்ரீட் ரோடு அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை இப்போது வரைக்கும் எல்லா அலுவலகங்களிலும் பொறுப்பானவர்களிடமும் பேசிவருகின்றோம், பேச்சு அளவில் ஆம் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர அதற்கான வேலைகள் இன்னும் நடைபெறவில்லை ஆனால் நாங்கள் தொடர்ந்து இவர்கள் அமைக்கும் வரை எல்லோரிடமும் எங்கள் குழுவின் சார்பாக செல்லவுள்ளோம் என கூறி தொடர்ந்த அவர் எங்களது மற்றுமொரு செயற்பாடாக இந்த பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி என்பது ஒரு நிலைதாண்டி நிலையாக இருப்பதில்லை காரணம் குடும்ப சுமையும், குடும்பத்தில் சரியான கவணிப்பும் இல்லாமைதான். இவர்களை மேற்கொண்டு படிக்க வைக்கவேண்டும் பள்ளி செல்லாதவர்களை மீள பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம் பெரும்பாலும் மாணவர்கள் 8ம் வகுப்பிலே தமது படிப்பினை கைவிட முனைகின்றனர், பெண்கள் 10 வது க்கு மேல் படித்தவர்களை காண்பது அரிது இவர்களை ஊக்குவிப்பதற்கு எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு நபர்களும் தனிப்பட்ட முறைகளில் செயற்பட்டு வருகின்றனர், அவர்கள் ஒவ்வொருவரையும் உங்களிடத்தில் அறிமுகப்படுத்தி கொள்ள ஆசைப்படுகின்றேன் எனக்கூறினார், இடையில் குறுக்கிட்ட நான் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி கூறி அவர்கள் இந்த குழுவில் இருந்து ஆற்றும் பணியினை தெரிவித்தால் நன்றாக இருக்குமே எனக்கூறினேன் எல்லோரும் சரியென ஆமோதித்தனர், முதலில் தலைவி கொளஞ்சியம்மாளிடம் இருந்து ஆரம்பித்தார்கள்.


எனது பெயர் கொளஞ்சியம்மாள் வயது-48 எனது கணவர் இறந்துவிட்டார், ஒரு பெண் பிள்ளையும் ஒரு பையனும் இருக்கின்றனர், மகள் B.E இரண்டாவது வருடம் படித்துவருகிறாள், மகன் 7th படித்து வருகின்றான், கணவர் இறந்ததில் இருந்து விவசாயக் கூலியாக சென்று எனது குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டி வருகின்றேன், எனது வேலை நேரம் போக இந்த குழுவின்மூலம் எங்கள் பகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக செயற்படுவேன், பொதுப் பிரச்சனைக்காக மனு கொடுத்தல், உரிய பொறுப்பானவர்களை சென்று பார்ப்பதற்கு நானும் என்னுடன் சிலரையும் அழைத்துச் செல்வேன். மாணவர்கள் யாரும் இடைநிறுத்தம் செய்திருந்தால் அவர்களது வீட்டுக்கு சென்று அவர்கள் பெற்றோருடன் பேசி பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாட்டினைச் செய்வேன். பொதுப் பிரச்சனை சார்பாக உடனடித்தேவைகளுக்கு கூடிப் பேசுவோம், இந்த குழுவில் தலைவியாய் இருப்பதற்கு எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது எனக்கூறினார்.

தொடர்ந்து துணைத்தலைவி B.அம்சவள்ளி பேசினார், என் குடும்பத்தில் 5 மகன்களும் 3 மகள்களும் இருக்கின்றனர்,மகன் ஒருவர் உழைப்பிலும் , எனது உழைப்பிலும் குடும்பம் சீவித்துக் கொண்டு இருக்கின்றது, எனது மகள் 10 வது சித்தியடந்த நிலையிலும் படிக்க வைக்கமுடியாத நிலையில் எனது குடும்ப சுமை இருக்கின்றது. இருக்கும் மிகுதி பிள்ளைகளையாவது படிப்பித்து அவர்களுக்கு நல்லவழியை காட்டவேண்டும் என்ற ஆசையில் இன்னொரு மகன் அருகில் உள்ள சிலிண்டர் குடோனில் வேலைக்கு சேர்ந்திருக்கின்றான், எனது வேலை நேரம் தவிர இந்த குழுவின் மூலம் எங்கள் பகுதியில் ஆற்றும் செயற்பாடுகளுக்கு துணைநிற்பேன் , தலைவி அவர்களுடன் சேர்ந்து நானும் எல்லா இடங்களுக்கும் சென்று பொது விடையங்கள் சம்மந்தமாக பேசுவோம் என்று கூறி முடித்தார்.

அடுத்து புஸ்பராணி தொடர்ந்தார், எனக்கு வயது 27, நான் B.Ed முடித்திருக்கின்றேன், எனக்கு ஒரு மகன் இருக்கின்றான், தற்போதுதான் 1வயது. கணவர் இப்போது என்னுடன் இல்லை அம்மா உழைப்பில்தான் எங்கள் குடும்ப வாழ்க்கை போய் கொண்டு இருக்கின்றது, அம்மா கொத்தனார் கூலியாகவும், விவசாயக்கூலியாகவும் கிடைக்கும் வேலைக்கு சென்றுவருகின்றார். நான் வீட்டில் சமைத்து அம்மாவுக்கும் எனது மகனுக்குமுரிய வேலைகளைச் செய்துவிட்டு மாலை நேரத்தில் இங்குள்ள 1 முதல் 12 வது வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இலவசமாக படிப்புச் சொல்லிக் கொடுக்கிறேன், இதற்காக எந்த பெற்றோரிடம் இருந்தும் நான் காசு வாங்குவதில்லை கற்ற கல்வியை பயனுள்ள முரையில் பயன்படுத்தவேண்டும் என்ற முறையில் இதனை செய்து வருகின்றேன், இந்த குழுவில் இணைந்த பின்பு என் மாலை நேர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 40 ஆக இருக்கின்றது. படிப்பதற்கு கஸ்டப்படும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த இந்த உதவியினை தொடர்ந்து செய்துவருவேன், என்னோடு என் குழு கூட இருக்கின்றது என கூறிமுடித்து ஆச்சரியப் படுத்தினார்.

தொடர்ந்து பத்மா பேசினார் எனக்கு ஒரு பெண் பிள்ளையும் ஒரு மகனும் இருக்கின்றனர் மகன்12 வது படிக்கிறான், மகள் 11 படிக்கிறாள், கணவர் Paint வேலை பார்க்கிறார், எனது குடும்பத்தை கவணிப்பதோடு இந்த குழுவின் உறுப்பினராக கடந்த ஒரு வருடமாக செயற்பட்டு வருகிறேன், நானும் என் குழுவில் இருக்கும் நிர்மலாவும் சேர்ந்து எங்கள் பகுதியில் இயங்கிவரும் பங்காரு அம்மையார் காப்பகத்தில் கடந்த 10 வருடங்களாக சமையல் வேலை செய்துவருகிறோம் ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பே நிதி உதவி இல்லாமல் அவர்கள் அதனை நிறுத்திவிட்ட போதும் இப்போதும் அங்கு பிள்ளைகள் வருகின்றனர் அதனால் நாங்கள் இருவரும் அவர்களை பராமரித்து உணவு சமைத்து கொடுத்துவருகின்றோம், அதற்கான செலவுகள் எல்லாமே எங்கள் பகுதியில் கிடைக்கும் நிதியினை வைத்துதான் செய்து வருகிறோம் , இதுவரை சம்பளம் என்று எதுவும் பெறவில்லை எங்களை நம்பி அனுப்பி வைக்கும் இந்த சிறுவர்களை பராமரிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கூறினார்.

அடுத்து தொடர்ந்தார் நிர்மலா எனக்கு 4 பையன்களும் 1 பெணும் இருக்கின்றனர், பத்மா அக்கா கூறியதைப் போன்று நான் இங்கு செயற்பட்டு வரும் பங்காரு அம்மையார் குழந்தைகள் காப்பகத்துக்கு சமையல் உதவியாளராக இருக்கின்றேன். தற்போது 25 குழந்தைகள்வரை இங்கு இருக்கின்றனர், அனைவரும் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள், காலையில் இருவரும் சென்று அவர்களுக்கு உரிய வேலையினை செய்து முடித்துவிட்டு இங்கு வந்து எனது குழந்தைகளுக்கும் வேலைகளைச் செய்துகொடுப்பேன், அத்தோடு எங்கள் குழுவின் மூலம் செய்துவரும் எல்லா பொதுக் காரியங்களிலும் அவர்களோடு சேர்ந்து செயற்படுவேன். இது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது எனக் கூறி முடித்தார். 

அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் வெண்மதி , எனக்கு 26 வயது எனக்கு 2 மகன்கள் இருக்கின்றார்கள், மூத்த மகன் 5வதும் இளையமகன் 2வதும் படிக்கின்றனர்,எனது கணவர் விவசாயத்திற்கு தினக்கூலியாக செல்கின்றார், நான் வீட்டில் இருக்கின்றேன் என்னிடம் 2 பசுமாடுகள் உள்ளன இதனை வைத்து இப்பகுதியில் பால் விற்று வருகின்றேன், இந்த குழுவில் இணைந்த பின்பு இவர்களைப் போல நாணும் எதாவது ஒரு பணியினை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன், பின்பு இங்கு சத்துக் குறைந்த சிறுவர்கள், மற்றும் பெண் பிள்ளைகளுக்கு மாலையில் என்னிடம் இருக்கும் பசும்பாலில் ஒரு பகுதியை காய்ச்சி இவர்களை வீட்டுக்கு வரவளைத்துக் கொடுப்பேன், தற்போது 5 சிறுவர்களும் 4 வளர் இளம் பெண்களும் வந்து செல்கின்றனர் எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இப்படியாக தொடர்ந்த அவர்களது அறிமுகத்தில் அடுத்து உஷாராணி தொடர்ந்தார் எனக்கு 3 பெண் பிள்ளைகளும் 1 பையனும் இருக்கின்றனர் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார் ஒருவர் 11 வது படிக்கிறார் ஒரு பெண் நர்சாக கம்மாபுரத்தில் பணிபுரிகிறார், எங்கள் பகுதியில் உள்ள பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சுகாதாரம் சம்மந்தமான விசயங்களை எடுத்துக் கூற நாங்கள் அவரை அழைத்துவந்து வீட்டுக்கு வீடு சென்று பேசுவோம், இங்குள்ள வளரிளம் பெண் பிள்ளைகளுக்கு என் மகளை வைத்து மருத்துவம் மற்றும் பெண்பிள்லைகளின் சுகாதாரம் பற்றி பேசவைப்போம்., இப்போதும் இங்குள்ள கர்ப்பினிப் பெண்களுக்கு தேவையான மருத்துவ சேவையினை என் மகள் செய்து வருகின்றார் ஆனால் அவர் பணிபுரிவது வேறு இடத்தில் நானும் இந்த குழுவில் இருந்து எல்லா வகையான பொது விடையங்களிலும் ஈடுபட்டு வருகின்றோம் எனக்கூறி முடித்தார்.

அடுத்தடுத்து அமுதவள்ளி, அம்பிகா, மல்லிகா, சரஸ்வதி, பாப்பாத்தி என தொடர்ந்தது அவர்கள் அறிமுகம் இவர்களும் அவர்களைப் போன்று சாதாரண நிலையில் இருந்து கொண்டு தங்களால் ஆன சேவைகளை செய்து வருகின்றனர். புஸ்பராணியுடன் இணைந்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் சரஸ்வதி, வீடு வீடாக சென்று பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகளைப் பற்றிய விபரங்களைத் திரட்டி அவர்களது குடும்பத்தினருடன் பேசும் மல்லிகா, என அவர்களது செயற்பாடுகள் நீண்டுகொண்டு போனது…
எல்லோர் பேச்சினையும் கேட்டு முடித்த பின்னர் அவர்கள் ஓவொருவர் மீதும் அளவிடமுடியாத மரியாதை மனதில் குடிகொண்டது, வெற்று விளம்பரங்களுக்கா தாம் செய்த சேவைகளை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் போடும் பிரபலங்கள் மத்தியில் கிட்டத்தட்ட இந்த ஊரினை தத்து எடுத்தவர்கள் போன்று இவர்கள் ஆற்றிவரும் இந்த பணிகள் உண்மையில் அளப்பரியதே நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஊருக்காகவே ஒரு விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செயற்பட முடியும் என்ற கருத்துத்தான் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அவர்கள் எல்லோரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை இப்படியான குழுக்கள் கிராமத்துக்கு ஒன்று இருந்தாலே போதும் நம் தேவைகளுக்காக அடுத்தவர்களை நாடி நிற்கவோ அல்லது பிரச்சனைகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்றோ இருக்க வேண்டியதில்லை உண்மையில் இவர்கள் போன்று இன்னும் பல குழுக்கள் இப்பகுதியில் இயங்க முன்வர வேண்டும் என்று கூறி முடித்தேன்.

இறுதியாக அப்பகுதியில் தன்னார்வ தொண்டராக பணியாற்றி வரும் தங்கமணி பேசினார் எங்கள் பகுதியில் குழுவினை ஆரம்பிக்க வேண்டும் என்று அருள்தேவன் அவர்கள் கூறிய போது உடனடியாக இங்கு யாரும் தயாராக இருக்கவில்லை காரணம் அனேகமான பேர் பல்வேறு நிறுவனங்களின் குழுக்களில் முன்னரே இணைந்திருந்தனர். பின்னர் இது பற்றி நானும் இந்த குழுவின் தலைவியாக இருக்கும் கொளஞ்சியம்மாள் அவர்களும் அடிக்கடி பேசிக் கொள்வோம் அப்போதே நமது குழு மற்றவர்களிடத்தில் இருந்து வேறுபட்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற ஆசை இருவர் இடத்திலும் இருந்தது அதன்பின் ஒன்றானவர்கள்தான் இந்த குழு உறுப்பினர்கள். இவர்களை ஒருங்கிணைத்த நோக்கத்தினை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றோம் ஆனால் அவர்களுக்குரிய பொருளாதார ரீதியான உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் எனது கவலையாக இருக்கின்றது. இப்போதுவரை அவர்கள் தமது சொந்த சேமிப்பினை வைத்து அவர்களுக்குள் கடனுதவிகள் கொடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு அரசின் மூலமோ அல்லது நிதி நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் கடனுதவிகளைப் பெற்றுக் கொடுக்க நானும் அருள்தேவன் இருவரும் முயன்றுவருகின்றோம், இந்த குழுக்களை Skills India மேலும் வளர்த்தெடுக்கும் பணியிணை செய்யவேண்டும் என்பதே எனது ஆசை எனக் கூறிமுடித்தார்.

இறுதியாக குழுவின் தலைவி கொளஞ்சியம்மாள் பேசினார். எங்கள் பகுதியில் இருக்கும் எல்லோர் மத்தியிலும் எங்கள் குழு பற்றி ஒரு நல்லெண்ணம் இருக்கின்றது. பலர் எங்கள் குழுவினையும் குழு உறுப்பினர்களையும் நேரடியாகப் பாராட்டியிருக்கின்றார்கள், எங்கள் குழுவினைப் போல் ஆரம்பிக்க பலருக்கும் ஆர்வம் இருக்கின்றது, இதனை முன்னெடுத்துச் செல்ல Skills India  முன்வரவேண்டும், அதே போல் பொருளாதார ரீதியாக எங்கள் குழு முன்னேற்றத்துக்கும் துணை நிற்க வேண்டும் எனக் கூறி முடித்தார்.

வெறும் கடன்களைக் கந்து வட்டிக்கு பெறுவது போன்று செயற்பட்டுவரும் சுய உதவிக் குழுக்களுக்கு மத்தியில் இவர்களைப் போன்று செயற்பட்டுவரும் குழுக்கள் ஆச்சரியத்தையும் குழுக்கள் ஆரம்பிக்கப்படுவதன் நோக்கம் நிறைவு பெறுவதாய் எண்ணத்தோன்றுகிறது. இவ்வாறான குழுக்கள் ஊருக்கு ஒன்று உருவாக்கவேண்டும், மக்கள் அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்க்க பழக்கப்படுத்தவேண்டும். இதுதான் இந்தியாவின் திறனை வளர்க்கும் செயலாக அமையும் அதை செய்ய Skills India வின் முயற்சிகள் தொடரும்.,,,,,,,,,




    
              

ஒரு விதை ஒரு விருட்சம்……



சமூகம் சார்ந்த ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தும் போதுதான் நமது செயற்பாடுகள் மக்களை சரியான முறையில் சென்றடைகின்றது. நமக்கு நாமே என்ற எண்ணங்களை ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கும் தமது சமூகத்தின் மீது அக்கறையினை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இங்கு பதிவிடப்படுவது நமது நிறுவனம் சார்ந்து தங்களை ஒரு அமைப்பாக உருவாக்கத்துடிக்கும் சில கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் ”இளைஞர் அமைப்பு”.

 கடலூரின் பரங்கிப் பேட்டை ஒன்றியத்தின் கிராமியப் பகுதிகளில் பணியிணை மேற்கொள்ளும் போது நமது ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்களிடம் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர் இந்த இளைஞர்கள். நமது கிராமங்களில் நீங்கள் பணியிணை மேற்கொண்டு வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியினை அளிக்கின்றது, எங்கள் தம்பி தங்கைகளின் கல்வி மேம்பாடு, மற்றும் எங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்காக செயற்படும் உங்களுடன் நாங்களும் இணைந்து செயற்பட ஆர்வமாக இருக்கின்றோம், நாங்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் எங்களை உங்கள் நிறுவனத்தினோடு தன்னார்வ அமைப்பாக சேர்த்துக் கொள்ள சம்மதிப்பீர்களா என கூறினார்கள்.

அருள்தேவன் அது பற்றி நம்மிடம் கூறிய போது அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. கடந்த வாரம் சிதம்பரம் சென்றிருந்த சமயம் அவர்களைப் பார்க்க முடியுமா என அருள்தேவன் அவர்களைக் கேட்ட போது அவர்கள் எங்கிருக்கின்றனர் என தொலைபேசியில் கேட்டு அறிந்து மாலை அவர்களை சந்திக்கச் செல்லலாம் என கூறிய போது மாலை அவர்களுடன் சந்திப்பதற்கான நேரத்தை முடிவு செய்து கொண்டு பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளுக்குச் சென்று வரலாம் என முடிவு செய்து சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்லும் பேரூந்தில் அமர்ந்தேன். பேரூந்து கூட்டமாகத்தான் இருந்தது ஆனால் கூட்டம் வித்தியாசமானது பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் ஜோடி ஜோடியாக பேரூந்தின் இருக்கைகளை நிறைத்திருந்தனர். அது ஒன்றும் பெரிய விஅசயமில்லை என்றுதான் தோன்றியது எனக்கு கல்லூரி மாணவர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் ஏற்கனவே பதிந்து இருந்தபடியினால்… சுற்றுலாப் பகுதியில் இறங்கிய போது அங்கிருந்தும் பல ஜோடிகள் வந்த பேரூந்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்..

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் இப்பகுதியில் ஒரு இயற்கையின் வரப் பிரசாதம் 20 தொடக்கம் 25 கிலோ மீட்டர் வரை பரந்து கிடக்கும் இந்த காட்டில் ஏராளமான அரியவகை உயிரிகளின் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மேற்கு வங்கத்தில் இருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்த படியாக பெரிய சதுப்பு நிலக் காடு இதுதான். அதனை அரசினால் சுற்றுலா பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பதினால் ஏராளமான இயந்திரப் படகுகள் தயார் நிலையிலும் பல படகுகள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தன உள்ளே சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை, பேச்சுத்துணைக்கு கூட ஆள் இல்லாததால் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த எல்லாவற்றையும் பார்த்து விட்டுத் திரும்பினேன்.

மாலை சிதம்பரம் கலை அறிவியல் கல்லூரியின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்து அவர்களைச் சந்திக்க காத்திருந்தோம். கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர் அவர்களுக்கு இடையில் சில நண்பர்களுடன் பேசியபடியே வந்த  விஜயபிரகாஷ் எங்களைப் பார்த்து புண்ணகையுடன் அறிமுகமானார். அவருடன் வந்த நண்பர்களை அறிமுகப் படுத்திக் கொண்டார் அங்கேயே தொடர்ந்து பேச சரியான இடமாக இருக்காது என்பதனால் அருகில் இருந்த வயல் வெளி எந்த இடையூறுகள் இல்லாமல் பேசுவதற்கு சரியான இடமாக தென்பட்டது நாங்கள் அவ்விடத்தை சென்று அடந்த போது அங்கே வந்து சேர்ந்தது 12 பேர் சேர்ந்த மாணவர் குழு.

முதலில் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள் வேதியல் இளநிலை மூன்றாம் வருடம் படிக்கும் இவர்கள் சிதம்பரத்தின் நகர்புறப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கல்லூரியினால் ஒன்றான நண்பர்கள் விஜயபிரகாஷ், செளந்தர், இளையராஜா, சிவச்சந்திரன், அருள்ஜோதி, பிருந்தா, ரேவதி, தங்கமொழி, அருளரசி, காமாட்சி, ஆனந்தலட்சுமி, ராஜேஸ்வரி என்ற 12 பேரில் 7 பேர் பெண்களாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அருள்தேவன் அவர்கள் நான் அங்கு வந்திருக்கும் நோக்கத்தினை கூறினார், எனக்கும் அந்த மாணவர்களின் நோக்கத்தின் மீது இருந்த ஆர்வத்தை கூறினேன், இதுவரை நீங்கள் அமைப்பாக என்ன செய்ய முயற்சித்தீர்கள் என்ற கேள்வியுடன் அவர்களுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

முதலில் அவர்கள் குழுவின் தலைவராக இருக்கும் விஜயபிரகாஷ் பேசினார். இது எங்கள் கல்லூரிக் காலத்தின் இரண்டாவது வருட ஆரம்பத்தில் உருவான நோக்கம் தான், ஒன்றாக சேர்ந்து எங்கள் பகுதிகளில் சென்று பார்க்கும் போது இவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போகும் இது பற்றி நண்பர்களுடன் பேசும் போதும் அவர்கள் மத்தியிலும் அது தொடர்பாக ஆர்வம் இருந்து வந்தது, முதலில் கல்லூரி அளவில் யோசித்தோம் என்ன செய்வது என்பதற்கு முதல் செயற்பாடாக நாம் கிராமங்களில் ஏன் மாலை வகுப்புக்கள் மாணவர்களுக்கு இலவசமாக எடுக்க கூடாது என்ற வினாவினை முன் வைத்தார் அருளரசி, அதன்பின்பாக எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும் எல்லா பெண் தோழிகளும் எங்கள் பகுதியினில் மாலை நேர இலவசக் வகுப்புக்களை எடுத்துவருகின்றனர் எனக் கூறி முடித்தார்.

  அடுத்ததாக சிவச்சந்திரன் தொடந்தார் எங்களுக்கு அமைப்பாக செயற்பட முடிவு செய்ததும் முதலில் தோன்றியது இரத்ததானம் செய்ய முன்னிற்க வேண்டும் என்று அதன்படி சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் எங்கள் குழுவில் இரத்தம் கொடுக்க கூடிய நிலையில் உள்ளவர்கள் பெயர்கள் அனைத்தினையும் பதிந்திருக்கின்றோம், எங்கள் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களை இரத்ததானம் செய்ய தூண்டி வருகின்றோம் எங்கள் குழுவில் உள்ள 5 பேர் இதுவரை 2 – 3 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்து இருக்கின்றோம் எனக் கூறினார்..


அடுத்து பேச்சினைத் தொடர்ந்தார் ரேவதி தற்போது எனது வீட்டில் 25 மாணவர்கள் மாலை நேர வகுப்பிற்காக வருகின்றனர், என்னுடன் எனது தோழிகளும் வந்து வகுப்பு எடுப்பதற்கு உதவுகின்றனர், நண்பர்கள் சிலரை எங்கள் பகுதியில் பள்ளி செல்லாத மாணவர்கள் வீட்டுக்கு சென்று பேச சொல்வேன் அவர்கள் சென்று அவர்கள் பெற்றோருடன் பேசுவார்கள் பள்ளிக்கு செல்ல நோட்டு, பைகள் இல்லையென்றால் சில நேரங்களின் அவற்றை வாங்கி கொடுப்பதற்கு எங்களால் ஆன உதவிகலை செய்து வருகின்றோம். எங்களது நட்பு வட்டத்தை இப்படியானதொரு பொதுச் சேவை செய்யும் அமைப்பாக மாற்றியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது எனக் கூறி முடித்தார்.

அடுத்து சிவச்சந்திரன் தொடர்ந்தார் எங்களின் நோக்கம் பெரியதாகப் பட்டது இதனை நாங்கள் தனியாக நின்று சாதிப்பதற்கு முடியுமா என்ற ஒரு பய உணர்வு தோன்றியது அப்போதுதான் எங்கள் பகுதியில் பணிபுரிந்துவரும் Skills India வுடன் கைகோர்த்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தோம், அதனை அருள்தேவன் அவர்களிடம் பேசியபோது மகிழ்ச்சியாக வரவேற்றார் எங்களுக்கு பல பணிகளை கிராமங்களில் ஆற்றவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது ஆனால் நாங்கள் இதுவரை செய்தது எல்லாம் எங்கள் அறிவுக்கு எட்டியவைதான் அவற்றை உங்களோடு சேர்ந்து மேலும் பெரிதாக எம் மக்களுக்கு செய்ய ஆசைப் படுகின்றோம் எனக் கூறினார்.


 

அவர்களுக்கிடையில் அடுத்ததாக பேசினார் அருள்ஜோதி இவர் இவர்கள் வகுப்பு அல்லாமல் வேறு பாடப் பிரிவைச் சேர்ந்தவர் நான் இவர்களுடன் கல்லூரியில் உரையாடுகின்ற பொழுது இவர்கள் இப்படியானதொரு அமைப்பினை செயற்படுத்த முனைவதைப் பார்த்து என்னையும் இவர்களுடன் இணைத்துக் கொண்டேன். கல்லூரியில் படிக்கும் இக்காலத்தில் எங்கள் சமூகத்தின் மீதான அக்கறையினை வெளிப்படுத்தும் விதமாக இந்த குழு செயற்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், ஆனால் எங்கள் அமைப்பின் மூலம் செய்வதற்கான செயற்பாடுகளின் அளவு ஒரு எல்லைக்கு அப்பால் செயற்படுத்த முடியாத நிலையில் இருந்த போது இதனை ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு இயங்கும் தன்னார்வ அமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது, அந்த நிலையில்த்தான் எங்கள் பகுதி கிராமங்களில் பணியாற்றிவரும் Skills India தொண்டு நிறுவனம் பற்றிய பேச்சினை எடுத்தோம் அதன் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் எங்களுக்கு நன்கு பரிட்சையமானவர் பல செயற்பாடுகளின் போது கூட நின்று உதவிகள் செய்தவர் எனவே அவரிடம் இது பற்றிப் பேசிய போது மகிழ்ச்சியுடன் வரவேற்று எங்கள் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டு ஆற்றவேண்டிய செயற்பாடுகள் என்ன என்பதை விளக்கினார் அதன் படி தற்போது நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் , இந்த வேளையில் மேலும் எங்களது இந்த இளைஞர் அமைப்பினால் என்னவெல்லாம் செயலாற்ற முடியும் என எங்களுக்கு விளக்க வேண்டும் எனக் கேட்டு முடித்தார்..

அவரது பேச்சில் இருந்த தெளிவும், இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதில் இருந்த ஆர்வமும் எங்களை மேலும் ஆச்சரியத்தையும் பெரு மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது, அந்த ஆர்வம் அவருடையது மட்டுமல்லாமல் அந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் ஆர்வம் என்பது அவர்கள் கிராமங்களில் செய்துவரும் செயற்பாடுகளில் இருந்து புலனாகிறது. அவர்கள் பேசி முடித்த பின்னர் எனது பேச்சினை ஆரம்பித்தேன், நண்பர்களே உங்களது ஆர்வமும், செயற்பாடுகளும் உண்மையில் எமக்கு பெருமகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றன நீங்கள் இப்போது செய்துவரும் ஒவ்வொரு செயற்பாடுகளும் பாராட்டுக்கு உரிய செயல்களே, உங்களை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லும் அருள்தேவன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்ட கடமைப் பட்டிருக்கின்றோம், பொதுவாகவே சில வேலைகளை இவர்கள்தான் தகுதியானவர்கள் என்ற கோட்பாடு இருக்கின்றது அந்த வகையில் கல்லூரி மாணவர்களாகிய உங்களால் கிராமங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளில் முக்கியமானவையும், முதன்மையானவையும் மக்கள் மத்தியில் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, ஒவ்வொரு வீடாக சென்று பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவ்ர்களது பிரச்சனைகளை வெளிக் கொண்டு வாருங்கள், அவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாத காரணங்களை ஆய்வு செய்யுங்கள் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து ஆலோசனையாக முன் வையுங்கள், இவ்வாறான உதவிகள் உங்களைப் போன்றவர்களைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியாது.

அதே போல் கல்லூரி மாணவிகள் நீங்கள் ஆற்றிவரும் பணிகளோடு உங்கள் கிராமங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கான சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுங்கள் அவர்களின் சுகாதார பழக்க வழக்கங்களை சரியான முறையில் கடைப்பிடிக்க வழிகாட்டுங்கள், இது கிராமங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கினை ஆற்றக் கூடியது, குழந்தைகளின் உடல்நலம் , கர்ப்பிணி பெண்கள் பற்றிய தகவல்கள் பற்றியெல்லாம் தரவுகளை வைத்திருந்து அந்த பகுதியின் பெண்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் பின்னால் இருந்து செயற்படுபவர்களாக இருங்கள்

இந்த அமைப்பினை இளைஞர்கள் கிராம வளர்ச்சி அமைப்பாக மாற்றம் செய்து உங்கள் பகுதியில் இருந்து கல்லூரியில் படிக்க வரும் ஒவ்வொரு மாணவரையும் இதில் தன்னார்வ தொண்டராக இணைப்பதன் மூலம் இந்த அமைப்பு நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் செயற்பட்டுவரும் பெரிய அமைப்பு ஒன்றாக மாற்றம் பெறும் என்பதில் அய்யம் இல்லை, எங்கள் நிறுவனத்தின் பணிகளும் மாணவர்களினதும், மக்களினது வாழ்வாதாரம் , மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த செயற்பாடுகளாக இருப்பதனால் இவை ஒவொன்றிலும் உங்கள் பங்களிப்பினை வழங்க முடியும் இவ்வாறான செயற்பாடுகளைத்தான் உங்களிடம் இருந்து எங்கள் நிறுவனம் எதிர்பார்கின்றது எனக் கூறி முடித்ததும் எல்லோரும் அந்த கருத்தினை வரவேற்றனர் அடுத்து பேசிய மாணவர் இளையராஜா உண்மையில் கிராமங்களில் நாங்கள் செயற்பட ஆரம்பித்த போது எவ்வாறான சேவையினை செய்வது என்ற குழப்பம் இருந்து கொண்டே வந்தது இப்போது சரியானதொரு பாதை கிடைத்திருப்பதாக உணர்கிறோம், ஒரு கல்லூரி மாணவராக இருக்கும் எங்களால் என்னவெல்லாம் எங்கள் சமுகத்திற்கு செய்ய முடியும் என்பதை சரியாக எடுத்துரைத்தீர்கள், எங்கள் அமைப்பின் வளர்ச்சி எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதற்கு சரியான முறையினை கூறினீர்கள் இதை கறுத்தில் கொண்டு எங்கள் பகுதியில் இருந்து கல்லூரிக்கு வரும் ஒவ்வொரு மாணவர்களையும் இந்த அமைப்பின் தன்னார்வ தொண்டராக மாற்றுவோம் என இப்போது உறுதியளிக்கின்றோம். இன்று நாங்கள் இட்ட இந்த விதை வருங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் விருட்சங்களாக மாறும் மாற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என கூறி முடித்தார்.

அதன் பின்னர் எல்லா மாணவர்களுடனும் அவர்களின் குடும்பநிலை மற்றும் சமுக சூழல்கள் பற்றி பேசிமுடித்துவிட்டு அவர்களிடம் இருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்.  இந்த சந்திப்பு என்னை சில சலனங்களில் இருந்து மீட்டிருந்தது காலையில் பிச்சாவரம் பேரூந்தில் ஜோடி ஜோடியாக கண்ட கல்லூரி மாணவர்கள் என் கண்முன்னே வந்து போனார்கள். இந்த பருவம் மிகவும் உணர்ச்சிப் பிளம்பானது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் அவர்களின் உணர்வுகளை வெளிக் கொண்டு வருகின்றனர். எல்லோருக்கும் இவர்களைப் போன்ற பொது நலச் சிந்தனை இருந்து விடுவதில்லை அதனால் இவர்களை எங்கள் நிறுவனம் இந்த அளவோடு விட்டுவிடுவதில்லை அடுத்தடுத்த இவர்கள் வளர்ச்சியின் பின்னால் துணை நிற்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஒடிக் கொண்டே இருந்தது….


இந்த விதைகள் விருட்சம் ஆகட்டும்

நாளைய இந்தியாவை ஆட்சி செய்யத் தயாராகும் சிறுவர் பாராளுமன்றங்கள்



வளமான வல்லரசாகும் இந்தியாவின் எதிர்காலம் இன்றைய பள்ளிகளிலே பயின்று கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின்  ஆயிரம் ஆயிரம் கனவுகளையும், சாதனைகளையும் சரித்திரங்களாக்கப் போகும் இந்த நாயகர்களை நாட்டிற்கு நல்ல முறையில் அர்ப்பணிக்க வேண்டிய கடமைகளை ஒவ்வொரு பள்ளிகளும், பெற்றோரும் செய்து கொண்டிருக்கின்றனர், இவர்கள் மட்டுமல்லாமல் இங்குள்ள அனைத்து அமைப்புகளும்  படிப்பு விளையாட்டு என்பதை தாண்டி பல்வேறு வகைகளில் மாணவர்களை மேம்பாடு அடையச்செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், அந்த வகையில் Skills India கிராமப்புற மாணவர்கள் மேம்பாட்டினை முதன்மையாக கொண்டு செயற்பட்டு வரும் அமைப்புகளில் ஒன்றாக கடலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றது.

கிராமிய வளர்ச்சி, சமூக மேம்பாடு, வாழ்வாதார வழிகாட்டுதல், பெண்களின் மேம்பாடு போண்ற செயற்பாடுகளைப் போல கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கினையும் முதன்மையாக கொண்டு கிராமப்புறங்களில் பணியாற்றி வருகின்றது. மாணவர்களை அறிவு சார்ந்தும், ஆற்றல் சார்ந்தும்,ஆரோக்கியமானவர்களாகவும், சமூக அக்கறைகளை உடையவர்களாகவும் உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட செயல்முறையே இந்த School Development Project.(கல்வி மேம்பாட்டு செயற்திட்டம்) இதன் செயற்பாடுகளாகவே,சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு,மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி, வளரிளம் பெண்களுக்கான உடல்நலம் மற்றும் சுகாதார ஆலோசனைகள், தரமான கல்விக்கான உரையாடல் போன்றவை செயற்படுத்தப்பட்டு வருகின்றது இவற்றை எல்லாம் தாண்டி மாணவர்களை ஒரு அமைப்பு ரீதியாக இவற்றை எல்லாம் மேற்கொள்ள செயற்படுத்தியுள்ள திட்டமே இந்த சிறுவர் பாராளுமன்றம்..
இவை ஒரு பள்ளியில் எப்படி ஆரம்ப்பிக்கப் படுகின்றது அது எப்படியான முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை விளக்குவதாக இதை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
  
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள எம் ஜி ஆர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி பரபரப்பான காலை வேளை…….



 மாணவர்களின் உறுதி மொழியேற்புடன் காலை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆராதனை முடிவினில் மாணவர்கள் எல்லோரும் வகுப்பறைகளை நோக்கி நகர்ந்து செல்ல எம்மை நோக்கி வந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி .T.ரெஜினா ஜெயமோகனா, தலைமை ஆசிரியர் புதியவர் அந்த பள்ளியில் பொறுப்பினை ஏற்று 1 ½ மாதங்களே ஆகின்றது.. அவரிடம். எங்களை அறிமுகப் படுத்தினார் பள்ளியின் ஆசிரியர் சிவகுருநாதன். Skills India இந்த பள்ளியில் கடந்த வருடம் முதல் பள்ளி மாணவர்களுக்கான பணியினை ஆற்றத் தொடங்கியது, இதுவரை பேரிடர் மேலாண்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்து கூறி பயிற்சிகளை வழங்கிய Skills India மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தேவன் இம்முறை மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதலுக்காக வருகை தந்திருந்தார்.

தலைமை ஆசிரியருடன் நாங்கள்  வருகை தந்ததிற்கான காரணத்தை கூறிய போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் பள்ளி கடந்த 2009-10 ம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதினைப் பெற்று இருக்கின்றது. பிந்தங்கிய சமுதாயத்தினை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாண்மையாக கல்வி பயின்று வருவதனாலும் மக்களின் வாழ்வியல்கள் வறுமைகளுடன் போராடும் தண்மையுடையதாக இருப்பதாலும் இந்த பள்ளிதான் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால வாழ்வினையும் இந்த சமுதாயத்தினரின் மாற்றங்களையும் தீர்மாணிக்கப் போகும் வழிகாட்டியாக இருக்கின்றது.

சிறந்த பள்ளியென்று எடுத்த பெயரினை தொடர்ச்சியாக வைத்திருக்க பாடுபடுவதினையே நான் இங்கு பொறுப்பினை ஏற்கும் போது முதல் குறிக்கோளாக கொண்டிருந்தேன். இப்போது பள்ளிகளில் சாரணிய இயக்கம்  ஆரம்பிக்கும் பணிகள் பள்ளியிலே நடைபெற்று வருகின்றது. எனவே இங்கு பயிலும் மாணவர்களில் சாரனிய இயக்கத்தில் இல்லாத மாணவர்களை இந்த சிறுவர் பாராளுமன்றத்தில் இணைத்துக்கொள்ளும்படி கூறிய போது நாங்கள் இல்லை இதில் எந்த மாணவர்களும் இருக்கலாம் எனக்கூறிய போது அவர் கூறிய பதில் ஆச்சரியத்தினையும் மகிழ்ச்சியினையும் தந்தது.. எங்கள் பள்ளியினை பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பாக சாரணிய இயக்கம் இருக்க போகின்றது அது போல இந்த குழந்தைகள் பாரளுமன்றமும் திகழவேண்டும் இனி வருகின்ற பள்ளியின் அனைத்து நிகழ்வுகளிலும் இவை தனித்தனி அமைப்புகளாக செயற்படத்தான் இவ்வாறு கூறியதாக கூறினார்.
பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்ற பின்பு மானவர்களை ஒருங்கினைத்து தந்தார் பள்ளியின் விஞ்ஞான பாட ஆசிரியர்….. அவர்கள். ஏற்கனவே அருள்தேவன் அவர்கல் இப்பள்ளியில் சுற்றுச்சூழல்,பேரிடர் மேலாண்மை போன்ற பபயிற்சிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு இருந்ததால் எல்லா மாணவர்களுக்கும் மிகவும் பரிட்சயம் ஆகியிருந்தார். மகிழ்ச்சியோடு மாணவர்களுடனான வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம்.

பின்னர் மாணவர்களின் அறிமுகத்தினை தொடர்ந்து நாங்கள் அங்கு வந்திருக்கும் நோக்கத்தினை விளக்கினார் அருள்தேவன்.


பள்ளிகளில் அமைக்கும் பாராளுமன்றம் என்பது மொத்தமாக நான்கு அமைச்சரவையை உள்ளடக்கியதாக இருக்கின்றது, இதில் உள்ள அமைச்சரவைக்கு எல்லாம் முதல் அமைச்சராக பள்ளியின் தலைமை ஆசிரியர் செயற்படுவார், அமைச்சர்களாக 4 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்1.கல்வி அமைச்சர் 2.விளையாட்டுத்துறை அமைச்சர் 3.மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் 4.பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆவர் இவர்களுடன் ஒவ்வொரு அமைச்சு பொருப்பின் கீழும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர்களாக இருப்பர்,  எனக்கூறி அமைச்சர்களின் பொறுப்புக்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

1.            கல்வி அமைச்சர் பொறுப்பில் உள்ள மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி தொடர்பான செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக செயற்படுவர், பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தல், மாணவர்கள் கலை இலக்கியம் நாடகம் போண்ற செயற்பாடுகளில் ஊக்கமளித்தல், பள்ளியில் நடைபெறும் விழாக்களை ஒருங்கிணைத்து செயற்படுத்த ஆசிரியர்களுக்கு துணையாக இருத்தல், பொது அறிவு மற்றும் செய்திகளை பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் அறியக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல் போன்றவையாகும்.
2.            விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பில் உள்ள மாணவர்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களுக்கு துணையாக இருத்தல், விளையாட்டு திறமைகளை உடைய மாணவர்களை ஊக்கப்படுத்தல், பள்ளியில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பாகவும் சேதமைடையாமலும் மாணவர்களிடம் கொடுத்து விளையாட வைத்தல், போன்றவற்றை மேற்கொள்வர்.
3.            3.மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சு இந்த பள்ளியில் உள்ள மாணவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரமான செயற்பாடுகளுக்கு துணையாக இருப்பர் ,மாணவர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்துவருவதற்கு ஊக்கமளித்தல்,தினமும் குளித்தல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், தலைக்கு எண்ணைவைத்து வாருதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்தல், உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு தெரியப்படுத்தல்.
          
4.            பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தன்னுடைய பள்ளியிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள சூழலை பாதுகாப்பது முதற்கடமையாக எடுத்து செயற்பட வேண்டும், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், பள்ளி வளாகத்தில் மரக்கண்றுகள் நடுதல், பராமரித்தல்,பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை பள்ளியில் இல்லாமல் செய்தல் அவற்றை முறையாக அகற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், பள்ளி சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களுக்கு துணையாக செயற்படுதல் போன்றவையாகும்.

இந்த விளக்கங்களை கூறிமுடித்ததும் மாணவர்கள் முகத்தில் மிகுந்த சந்தோசத்தை காணமுடிந்தது, அவர்கள் மனதளவில் இந்த அமைப்பினை அவர்கள் கற்பனை செய்திருப்பார்கள் போலும். பேசி முடித்ததும் அருள் தேவன் அவர்கள் இந்த அமைப்பை நம் பள்ளியில் உருவாக்க விரும்புகின்றீர்களா எனக் கேட்ட போது எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமா என ஆர்பரித்தனர், ஆரவாரங்களுடன் அமைச்சுப்பொறுப்புக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதலாக கல்வி அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் கல்வி அமைச்சராக 8ம் வகுப்பை சேர்ந்த S.செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக G.சேஷன்ராஜ், பாரதி, சாமித்துரை, விஜயலட்சுமி, இராதிகா, செளமியா ,சரண்யா.ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.    


அதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறைக்கான அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விளையாட்டு துறை அமைச்சராக M.துரை அவர்கள் தாமாக முன்வந்தார், அவருடன் K.பிரகாஷ், P.கல்விக்கரசி, J.ப்ரியா, A.அன்பு, R.இளவரசி, A.சக்திநிலா. ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

அடுத்ததாக மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக S.இராஜ்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், அவருடன் உறுப்பினர்களாக M.முத்தரசன்,R.சதீஷ்,P.தமிழரசன், K.தனுசியா, L.சித்திரா, L.புஷ்பா, A. அன்புச்செல்வி. ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர், இறுதியாக பசுமை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக பொறுப்பினை ஏற்றார் K.சந்தோஷ் அவருடன் K.செளந்தர்யா, B.மதினா, K.சதீஷ், G.வெங்கடேஷ், M.காளியம்மாள், R.புவனா, L.லட்சுமி ஆகியோர் பொறுப்பினை ஏற்க உறுப்பினர்கள் தேர்வு இனிதே நிறைவு பெற்றது.

தலைமை ஆசிரியர் மற்றும் அருள்தேவன் ஆகியோர் உறுதிமொழியினைக் கூற ஒவ்வொரு அமைச்சரும் பொறுப்பில் உள்ள மாணவர்களும் தங்களது அமைச்சு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் பொறுப்பினை ஏற்ற மாணவர்களை பேசும்படி தலைமை ஆசிரியர் அவர்கள் அழைத்தார் முதலில் தயங்கிய மாணவர்கள் பின்பு முன்வந்து பேசத்தொடங்கினர். விளையாட்டு துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட M. துரை பேசும்போது எங்களுக்கு இவ்வாறான பொறுப்பினைக் கொடுத்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த பொறுப்பினை நாங்கள் திறமையான முறையில் செயற்படுத்தி பள்ளிக்கு பெயரினை பெற்றுத் தருவோம் என்று கூறினார்.

பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பினை ஏற்ற மாணவன் சந்தோஷ் பேசும் போது எனக்கு இத்துறையில் இருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. அருள்தேவன் சார் கூறியதைப்போன்று எங்கள் பள்ளியையும் சுற்றுச்ச்சூழலையும் பாதுகாப்பதற்கான சுற்றுப்புறமாக வைத்திருக்க பாடுபடுவோம் என மாணவர்கள் எல்லோரும் உறுதியளிக்கின்றோம் எனக்கூறினார். அதன்பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் இந்த பள்ளியில் செயற்படவுள்ள சிறுவர் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக ஆசிரியர் சிவகுருநாதன்  அவர்களையும் ஆசிரியை L. கிறிஸ்ணவேணி அவர்களையும் நியமிக்கின்றேன். இன்றுமுதல் கொண்டு இந்த அமைப்பு பள்ளியில் ஒரு அங்கமாக செயற்பட நானும் இவ் ஆசிரியர்களும் துணைநிற்போம் எங்கள் பள்ளியின் மீது அக்கறை கொண்டு இதனை செயற்படுத்தி மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ள Skills India தொண்டு நிறுவனத்துக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். எங்கள் பள்ளியின் வளர்ச்சியில் நீங்களும் துணைநின்று இந்த மாணவர்களை மேம்படுத்த உதவவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.-





பின்னர் ஒவ்வொரு அமைச்சு பொறுப்புக்களும் தமது குழுவினரோடு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக அவர்களிடம் இருந்து விடைபெறுவதாக கூறியபோது சார் எங்கள் மாணவர்களின் கலைதிறமைகளை நீங்கள் பார்க்க வேண்டும் என மாணவர்கள் ஆசைப்படுகின்றனர் எனக்கூறினார் ஆசிரியர் --- அவர்கள் மகிழ்வோடு மாணவர்களின் கலைத்திறமைகளைப் பார்க்கத் தயாரானோம். நடனம், தற்பாதுகாப்புக்கலை, வில்லுப்பாட்டு, பேச்சு என பல்வேறு திறன்களை வெளிப்படுத்திய போது நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கடலோரத்து கிராமிய மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சியினை பார்க்கும் போது நாங்கள் உருவாக்கியிருக்கும் இந்த சிறுவர் பாராளுமன்றம் இவர்களின் பல்வேறு திறமைகளை வளர்க்க ஒரு ஊடகமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை எனத்தோன்றியது. மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்றியினைக் கூறிவிட்டு திரும்பினோம்.சாதிப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் ஆனால் அவர்களைத் தூண்டிவிடுவதற்கு யார் வருவார்கள் எனக்காத்திருக்கின்றார்கள் தூண்டுகோளாக நாமிருந்தால் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கமாவது வெல்லுமா என்ற ஏக்கம் இனி இருக்காது.