Thursday 23 August 2012

நாளைய இந்தியாவை ஆட்சி செய்யத் தயாராகும் சிறுவர் பாராளுமன்றங்கள்



வளமான வல்லரசாகும் இந்தியாவின் எதிர்காலம் இன்றைய பள்ளிகளிலே பயின்று கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின்  ஆயிரம் ஆயிரம் கனவுகளையும், சாதனைகளையும் சரித்திரங்களாக்கப் போகும் இந்த நாயகர்களை நாட்டிற்கு நல்ல முறையில் அர்ப்பணிக்க வேண்டிய கடமைகளை ஒவ்வொரு பள்ளிகளும், பெற்றோரும் செய்து கொண்டிருக்கின்றனர், இவர்கள் மட்டுமல்லாமல் இங்குள்ள அனைத்து அமைப்புகளும்  படிப்பு விளையாட்டு என்பதை தாண்டி பல்வேறு வகைகளில் மாணவர்களை மேம்பாடு அடையச்செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், அந்த வகையில் Skills India கிராமப்புற மாணவர்கள் மேம்பாட்டினை முதன்மையாக கொண்டு செயற்பட்டு வரும் அமைப்புகளில் ஒன்றாக கடலூர் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றது.

கிராமிய வளர்ச்சி, சமூக மேம்பாடு, வாழ்வாதார வழிகாட்டுதல், பெண்களின் மேம்பாடு போண்ற செயற்பாடுகளைப் போல கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கினையும் முதன்மையாக கொண்டு கிராமப்புறங்களில் பணியாற்றி வருகின்றது. மாணவர்களை அறிவு சார்ந்தும், ஆற்றல் சார்ந்தும்,ஆரோக்கியமானவர்களாகவும், சமூக அக்கறைகளை உடையவர்களாகவும் உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட செயல்முறையே இந்த School Development Project.(கல்வி மேம்பாட்டு செயற்திட்டம்) இதன் செயற்பாடுகளாகவே,சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு,மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி, வளரிளம் பெண்களுக்கான உடல்நலம் மற்றும் சுகாதார ஆலோசனைகள், தரமான கல்விக்கான உரையாடல் போன்றவை செயற்படுத்தப்பட்டு வருகின்றது இவற்றை எல்லாம் தாண்டி மாணவர்களை ஒரு அமைப்பு ரீதியாக இவற்றை எல்லாம் மேற்கொள்ள செயற்படுத்தியுள்ள திட்டமே இந்த சிறுவர் பாராளுமன்றம்..
இவை ஒரு பள்ளியில் எப்படி ஆரம்ப்பிக்கப் படுகின்றது அது எப்படியான முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை விளக்குவதாக இதை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
  
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள எம் ஜி ஆர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி பரபரப்பான காலை வேளை…….



 மாணவர்களின் உறுதி மொழியேற்புடன் காலை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆராதனை முடிவினில் மாணவர்கள் எல்லோரும் வகுப்பறைகளை நோக்கி நகர்ந்து செல்ல எம்மை நோக்கி வந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி .T.ரெஜினா ஜெயமோகனா, தலைமை ஆசிரியர் புதியவர் அந்த பள்ளியில் பொறுப்பினை ஏற்று 1 ½ மாதங்களே ஆகின்றது.. அவரிடம். எங்களை அறிமுகப் படுத்தினார் பள்ளியின் ஆசிரியர் சிவகுருநாதன். Skills India இந்த பள்ளியில் கடந்த வருடம் முதல் பள்ளி மாணவர்களுக்கான பணியினை ஆற்றத் தொடங்கியது, இதுவரை பேரிடர் மேலாண்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்து கூறி பயிற்சிகளை வழங்கிய Skills India மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தேவன் இம்முறை மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதலுக்காக வருகை தந்திருந்தார்.

தலைமை ஆசிரியருடன் நாங்கள்  வருகை தந்ததிற்கான காரணத்தை கூறிய போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் பள்ளி கடந்த 2009-10 ம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதினைப் பெற்று இருக்கின்றது. பிந்தங்கிய சமுதாயத்தினை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாண்மையாக கல்வி பயின்று வருவதனாலும் மக்களின் வாழ்வியல்கள் வறுமைகளுடன் போராடும் தண்மையுடையதாக இருப்பதாலும் இந்த பள்ளிதான் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால வாழ்வினையும் இந்த சமுதாயத்தினரின் மாற்றங்களையும் தீர்மாணிக்கப் போகும் வழிகாட்டியாக இருக்கின்றது.

சிறந்த பள்ளியென்று எடுத்த பெயரினை தொடர்ச்சியாக வைத்திருக்க பாடுபடுவதினையே நான் இங்கு பொறுப்பினை ஏற்கும் போது முதல் குறிக்கோளாக கொண்டிருந்தேன். இப்போது பள்ளிகளில் சாரணிய இயக்கம்  ஆரம்பிக்கும் பணிகள் பள்ளியிலே நடைபெற்று வருகின்றது. எனவே இங்கு பயிலும் மாணவர்களில் சாரனிய இயக்கத்தில் இல்லாத மாணவர்களை இந்த சிறுவர் பாராளுமன்றத்தில் இணைத்துக்கொள்ளும்படி கூறிய போது நாங்கள் இல்லை இதில் எந்த மாணவர்களும் இருக்கலாம் எனக்கூறிய போது அவர் கூறிய பதில் ஆச்சரியத்தினையும் மகிழ்ச்சியினையும் தந்தது.. எங்கள் பள்ளியினை பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பாக சாரணிய இயக்கம் இருக்க போகின்றது அது போல இந்த குழந்தைகள் பாரளுமன்றமும் திகழவேண்டும் இனி வருகின்ற பள்ளியின் அனைத்து நிகழ்வுகளிலும் இவை தனித்தனி அமைப்புகளாக செயற்படத்தான் இவ்வாறு கூறியதாக கூறினார்.
பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்ற பின்பு மானவர்களை ஒருங்கினைத்து தந்தார் பள்ளியின் விஞ்ஞான பாட ஆசிரியர்….. அவர்கள். ஏற்கனவே அருள்தேவன் அவர்கல் இப்பள்ளியில் சுற்றுச்சூழல்,பேரிடர் மேலாண்மை போன்ற பபயிற்சிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு இருந்ததால் எல்லா மாணவர்களுக்கும் மிகவும் பரிட்சயம் ஆகியிருந்தார். மகிழ்ச்சியோடு மாணவர்களுடனான வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம்.

பின்னர் மாணவர்களின் அறிமுகத்தினை தொடர்ந்து நாங்கள் அங்கு வந்திருக்கும் நோக்கத்தினை விளக்கினார் அருள்தேவன்.


பள்ளிகளில் அமைக்கும் பாராளுமன்றம் என்பது மொத்தமாக நான்கு அமைச்சரவையை உள்ளடக்கியதாக இருக்கின்றது, இதில் உள்ள அமைச்சரவைக்கு எல்லாம் முதல் அமைச்சராக பள்ளியின் தலைமை ஆசிரியர் செயற்படுவார், அமைச்சர்களாக 4 பேர் தெரிவு செய்யப்படுவார்கள்1.கல்வி அமைச்சர் 2.விளையாட்டுத்துறை அமைச்சர் 3.மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் 4.பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆவர் இவர்களுடன் ஒவ்வொரு அமைச்சு பொருப்பின் கீழும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர்களாக இருப்பர்,  எனக்கூறி அமைச்சர்களின் பொறுப்புக்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

1.            கல்வி அமைச்சர் பொறுப்பில் உள்ள மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி தொடர்பான செயற்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக செயற்படுவர், பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தல், மாணவர்கள் கலை இலக்கியம் நாடகம் போண்ற செயற்பாடுகளில் ஊக்கமளித்தல், பள்ளியில் நடைபெறும் விழாக்களை ஒருங்கிணைத்து செயற்படுத்த ஆசிரியர்களுக்கு துணையாக இருத்தல், பொது அறிவு மற்றும் செய்திகளை பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் அறியக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல் போன்றவையாகும்.
2.            விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பில் உள்ள மாணவர்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களுக்கு துணையாக இருத்தல், விளையாட்டு திறமைகளை உடைய மாணவர்களை ஊக்கப்படுத்தல், பள்ளியில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பாகவும் சேதமைடையாமலும் மாணவர்களிடம் கொடுத்து விளையாட வைத்தல், போன்றவற்றை மேற்கொள்வர்.
3.            3.மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சு இந்த பள்ளியில் உள்ள மாணவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரமான செயற்பாடுகளுக்கு துணையாக இருப்பர் ,மாணவர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்துவருவதற்கு ஊக்கமளித்தல்,தினமும் குளித்தல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், தலைக்கு எண்ணைவைத்து வாருதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்தல், உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு தெரியப்படுத்தல்.
          
4.            பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தன்னுடைய பள்ளியிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள சூழலை பாதுகாப்பது முதற்கடமையாக எடுத்து செயற்பட வேண்டும், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், பள்ளி வளாகத்தில் மரக்கண்றுகள் நடுதல், பராமரித்தல்,பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை பள்ளியில் இல்லாமல் செய்தல் அவற்றை முறையாக அகற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், பள்ளி சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களுக்கு துணையாக செயற்படுதல் போன்றவையாகும்.

இந்த விளக்கங்களை கூறிமுடித்ததும் மாணவர்கள் முகத்தில் மிகுந்த சந்தோசத்தை காணமுடிந்தது, அவர்கள் மனதளவில் இந்த அமைப்பினை அவர்கள் கற்பனை செய்திருப்பார்கள் போலும். பேசி முடித்ததும் அருள் தேவன் அவர்கள் இந்த அமைப்பை நம் பள்ளியில் உருவாக்க விரும்புகின்றீர்களா எனக் கேட்ட போது எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமா என ஆர்பரித்தனர், ஆரவாரங்களுடன் அமைச்சுப்பொறுப்புக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதலாக கல்வி அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் கல்வி அமைச்சராக 8ம் வகுப்பை சேர்ந்த S.செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக G.சேஷன்ராஜ், பாரதி, சாமித்துரை, விஜயலட்சுமி, இராதிகா, செளமியா ,சரண்யா.ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.    


அதனைத் தொடர்ந்து விளையாட்டுத்துறைக்கான அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விளையாட்டு துறை அமைச்சராக M.துரை அவர்கள் தாமாக முன்வந்தார், அவருடன் K.பிரகாஷ், P.கல்விக்கரசி, J.ப்ரியா, A.அன்பு, R.இளவரசி, A.சக்திநிலா. ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

அடுத்ததாக மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக S.இராஜ்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், அவருடன் உறுப்பினர்களாக M.முத்தரசன்,R.சதீஷ்,P.தமிழரசன், K.தனுசியா, L.சித்திரா, L.புஷ்பா, A. அன்புச்செல்வி. ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர், இறுதியாக பசுமை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக பொறுப்பினை ஏற்றார் K.சந்தோஷ் அவருடன் K.செளந்தர்யா, B.மதினா, K.சதீஷ், G.வெங்கடேஷ், M.காளியம்மாள், R.புவனா, L.லட்சுமி ஆகியோர் பொறுப்பினை ஏற்க உறுப்பினர்கள் தேர்வு இனிதே நிறைவு பெற்றது.

தலைமை ஆசிரியர் மற்றும் அருள்தேவன் ஆகியோர் உறுதிமொழியினைக் கூற ஒவ்வொரு அமைச்சரும் பொறுப்பில் உள்ள மாணவர்களும் தங்களது அமைச்சு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் பொறுப்பினை ஏற்ற மாணவர்களை பேசும்படி தலைமை ஆசிரியர் அவர்கள் அழைத்தார் முதலில் தயங்கிய மாணவர்கள் பின்பு முன்வந்து பேசத்தொடங்கினர். விளையாட்டு துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட M. துரை பேசும்போது எங்களுக்கு இவ்வாறான பொறுப்பினைக் கொடுத்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த பொறுப்பினை நாங்கள் திறமையான முறையில் செயற்படுத்தி பள்ளிக்கு பெயரினை பெற்றுத் தருவோம் என்று கூறினார்.

பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பினை ஏற்ற மாணவன் சந்தோஷ் பேசும் போது எனக்கு இத்துறையில் இருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. அருள்தேவன் சார் கூறியதைப்போன்று எங்கள் பள்ளியையும் சுற்றுச்ச்சூழலையும் பாதுகாப்பதற்கான சுற்றுப்புறமாக வைத்திருக்க பாடுபடுவோம் என மாணவர்கள் எல்லோரும் உறுதியளிக்கின்றோம் எனக்கூறினார். அதன்பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் இந்த பள்ளியில் செயற்படவுள்ள சிறுவர் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக ஆசிரியர் சிவகுருநாதன்  அவர்களையும் ஆசிரியை L. கிறிஸ்ணவேணி அவர்களையும் நியமிக்கின்றேன். இன்றுமுதல் கொண்டு இந்த அமைப்பு பள்ளியில் ஒரு அங்கமாக செயற்பட நானும் இவ் ஆசிரியர்களும் துணைநிற்போம் எங்கள் பள்ளியின் மீது அக்கறை கொண்டு இதனை செயற்படுத்தி மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ள Skills India தொண்டு நிறுவனத்துக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். எங்கள் பள்ளியின் வளர்ச்சியில் நீங்களும் துணைநின்று இந்த மாணவர்களை மேம்படுத்த உதவவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.-





பின்னர் ஒவ்வொரு அமைச்சு பொறுப்புக்களும் தமது குழுவினரோடு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக அவர்களிடம் இருந்து விடைபெறுவதாக கூறியபோது சார் எங்கள் மாணவர்களின் கலைதிறமைகளை நீங்கள் பார்க்க வேண்டும் என மாணவர்கள் ஆசைப்படுகின்றனர் எனக்கூறினார் ஆசிரியர் --- அவர்கள் மகிழ்வோடு மாணவர்களின் கலைத்திறமைகளைப் பார்க்கத் தயாரானோம். நடனம், தற்பாதுகாப்புக்கலை, வில்லுப்பாட்டு, பேச்சு என பல்வேறு திறன்களை வெளிப்படுத்திய போது நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கடலோரத்து கிராமிய மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சியினை பார்க்கும் போது நாங்கள் உருவாக்கியிருக்கும் இந்த சிறுவர் பாராளுமன்றம் இவர்களின் பல்வேறு திறமைகளை வளர்க்க ஒரு ஊடகமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை எனத்தோன்றியது. மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்றியினைக் கூறிவிட்டு திரும்பினோம்.சாதிப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் ஆனால் அவர்களைத் தூண்டிவிடுவதற்கு யார் வருவார்கள் எனக்காத்திருக்கின்றார்கள் தூண்டுகோளாக நாமிருந்தால் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கமாவது வெல்லுமா என்ற ஏக்கம் இனி இருக்காது.
   
   

No comments:

Post a Comment