Tuesday 28 August 2012

எனக்கும் கல்வி வேண்டும் - ஒரு மாணவனின் உரிமைக் குரல்


கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை.

இந்த வறுமைதான் பல கிராமங்களில் பிள்ளைகளின் கல்வியினை பாதிக்கச் செய்யும் நோயாக இருக்கின்றது. இந்த பதிவு ஒரு மாணவனைப் பற்றியது. காலையில் புத்தகப் பையுடன் செல்ல வேண்டியவனின் வாழ்க்கை குப்பை எடுக்கும் பையுடன் மாறவைத்த நிகழ்வின் தொகுப்புத்தான் இந்த பதிவு இலவசங்களை மட்டும் வாரி வழங்கிவிட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்ற மாயையை உடைத்தெறியும் ஒரு பதிவு.

அதிகாலை 4 மணி ஆள் அரவம் இல்லாத அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதினில் தோளிலே கோணிப் பையுடன் கடற்கரையை நோக்கி நடை போட்டுச் செல்கின்றது இரு உருவங்கள் இவர்கள் மீன் விற்பனை செய்பவர்கள் அல்ல, மீனவர்களுக்கு உணவுவழங்கச் செல்பவர்களும் அல்ல காலை வேளையில் கடற்கரையோரம் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி எடுப்பதற்காக செல்லும் ஒரு தாயும் மகனும்.

விஜி
விஜி. கடந்த வருடம் 7 வது படித்த மாணவன் பரங்கிப் பேட்டை ஒன்றியத்தில் கிள்ளை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கலைஞர் நகர்தான் இவனது சொந்த ஊர். ஆழிப் பேரலையின் அனர்த்தத்தின் பின்னர் நிறுவனம் ஒன்றினால் கட்டிக்கொடுக்கப் பட்ட வீட்டில் வாழும் இவனது குடும்பத்தில் தற்போது 3 சகோதரர்கள் அம்மா அப்பாவோடு 6 பேர் வசித்து வருகின்றனர், ஒரு அக்கா 17 வயது ஆகும் முன்பே திருமணம் முடித்து வேறு வீட்டுக்கு சென்று விட்டார். இப்போது இருக்கும் இந்த 4 பையன்களும் முறையே 13,12, 8, 6 வயதை உடைய பள்ளி செல்லும் சிறுவர்கள் 2 வருடங்களுக்கு முன்னால் வரை சாதாரண ஏழைக் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சியோடு பள்ளி சென்றுவந்த இந்த குடும்பத்தில் இன்று வறுமை தாண்டவம் ஆடுகின்றது, காரணம் உழைப்பினை வழங்கும் இருவரும் நோயினில் வீழ்ந்ததுதான்.

விஜி யின் அப்பா ஒரு நாள் கூலிக்காக வரப்பு வேலை செய்யும் தொழிலாளி கடந்த 2வருடத்துக்கு முன்பு வரை நன்றாக தனது கூலி வேலையினப் பார்த்து தன் குடும்பத்தின் செலவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உடலில் நெஞ்சுவலி வந்து இன்று பலமான வேலைகள் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றார், இருந்தும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தடவை வேலை பார்க்கச் சென்ற போது வரப்பில் இருந்து நெஞ்சுவலியால் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்தவரை வீட்டில் கொண்டுவந்து சேர்த்தனர் கூட வேலை செய்யும் தொழிலாளிகள்.ஆனால் இன்று வரை வைத்தியசாலையும் கையுமாக திரிந்தாலும் இடையிடையே கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளுக்கு சென்று வருகின்றார் விஜியின் அப்பா.

விஜியின் அம்மா 
இந்த 2 வருடங்களின் பின்னரான வாழ்க்கைச் செலவுகள் அவர் மனைவி கையில் வந்துவிட அவருக்கு தெரிந்தது இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பொறுக்கி அதனை எடை போட்டு விற்பதுதான் இந்த அற்ப வருமானத்திலேதான் இன்று இவர்கள் குடும்ப நிலை போய்க் கொண்டு இருக்கின்றது இத்தனைக்கும் இவரும் உடல் ஆரோக்கியமானவர் அல்ல அவருக்கும்  வலிப்பு நோய் இருக்கின்றது, இவரால் பகலில் வீட்டை விட்டு வெளியிலே செல்லமுடியாத நிலை வெயில் அதிகமாக பட்டுவிட்டால் வலிப்பால் கீழே விழுந்து அழுத்த தொடங்கி விடுவார். இந்த நிலைதான் இவரது தொழில் செய்யும் நேரதை காலை 3.00 மணியில் இருந்து 7.00 மணிக்கு முன்னராக முடித்து விடுகின்றார் இந்த நேரத்தில் இவருக்கு எதுவும் வலிப்பு வந்துவிடாமல் இருக்கவும், பகல் நேரத்தில் இவரை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்க வேண்டிய நிலை விஜிக்கு,,,

கடந்த வருடம் வரை நன்றாகப் படித்து வந்த விஜியினால் இன்றைய சூழ்நிலையில் பள்ளிக்குப் செல்ல முடியவில்லை. கல்வியின் ஆசை இன்னும் அவனுக்கு கரைந்து போக வில்லை அவனது அண்ணனின் பாடப் புத்தகங்களை வீட்டிலிருந்து கல்விக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த மாணவனது வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்ற கவலை இன்னும் அவன் தாய் முகத்தில் இருக்கின்றது.

விஜியின் அண்ணன் மணிகண்டன்
இவரது மூத்த மகன். பெயர் மணிகண்டன், தற்போது கலைஞர் நகர் நடுநிலைப் பள்ளியில் 8 வது படித்துக் கொண்டிருக்கும் மாணவன். இவனது படிப்பும் குளப்பமாகி விடக் கூடாது என்ற ஏக்கத்தில் இருக்கும் இவனது பெற்றோர்  இருக்கின்ற எல்லா கஸ்ட நிலைகளையும் தாண்டி பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு 8 வது படிக்கும் இந்த மாணவனுக்கு இருக்கும் குடும்ப பொறுப்புக்கள் ஏராளம்.  விஜியின் அம்மாவுக்கு அடுப்படியில் இருக்கமுடியாத நிலை, அவர் உடலில் வெப்பம் பட்டுவிட்டால் அடுத்த நிமிடம் வலிப்பு நிலைக்கு சென்று விடுகின்றார் அதனால் சமையல் வேலை எல்லாம் மகேந்திரனின் கையில்தான்.

உணவு தயாரிப்பில் மணிகண்டன்
 காலையில் எழுந்து எல்லோருக்குமாக உணவு சமைக்கும் வேலையில் ஆரம்பித்து விடுவான் மணிகண்டன் சாதம் வடித்து எதாவது காய்களையோ, அல்லது அவனது தம்பி கடற்கரையில் இருந்து வரும்போது கொண்டுவரும் சின்ன சின்ன மீன்களை வைத்து எதாவது சமைத்து வைத்து அவனும் சாப்பிட்டு தம்பிகள் இருவருக்கு சாப்பாடு கொடுத்து அவர்களையும் குளிக்கவைத்து பள்ளிக்கு செல்லத் தயார் படுத்தி அவனுடன் அழைத்து செல்வது. பின்பு மாலை பள்ளி விட்டு வந்து அவனது துனியில் இருந்து வீட்டில் இருக்கும் எல்லோர் துனிகளையும் துவைத்துப் போடுவது, ஒரு நாளுக்கு பின்னர் மாற்றி உடுப்பதற்குரிய மாற்றுத் துணி அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் இந்த வேலை அவனுக்கு வாடிக்கையானதே. அதன் பின்னர் வீட்டு வேலைகள் எல்லாம் செய்து இரவு உணவுக்காக் சாதம் வடித்து வைப்பான அவனது அப்பாவும் வந்த பின்னர் இருவரும் சேர்ந்து ஏதாவது  சமையலைச் செய்து அவர்கள் குடும்பத்தோடு சாப்பிடுகின்றனர்.
விஜியின் குடும்பம்

ஒரு அழகான குடும்பம் 4 ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பின்னாட்களில் நன்றாக வாழப் போகும் குடும்பந்தான் ஆனால் அவர்கலின் தற்போதைய நிலை மோசமானதாக் இருக்கின்றது. குழந்தைகள் கல்வி கற்பதற்கான உரிமை என்ற பேசுகின்றோம் அந்த உரிமை கிடைப்பதற்கான வழியினைச் செய்ய அரசால் முடிய வில்லை. இந்த சந்திப்பின் பின்னர் அவர்களது நிலை பற்றி விஜியின் தாய் பேசினார் . எங்கள் குடும்பம் குடிசை போட்டு இங்கு வாழ்ந்து வந்த காலத்தில் கூட எனது கணவர் மீன் பிடி வேலைக்கு சென்று நன்றாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தோம் இன்றைய நிலையில் சுனாமிக்குப் பின்னரான கட்டிக் கொடுக்கப் பட்ட வீட்டில் இருந்து வந்தாலும் அதனில் இருப்பதற்கான எந்த வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்றோம் சுனாமியின் போது கொடுத்த வலை வள்ளங்கள் தானே புயலில் சென்று விட்டன அதன் பின்னரான இழப்பீடுகள் இன்னும் கிடைக்க வில்லை.  உடல்நிலை முடியாத நிலையில் என்னாலும் என் கணவராலும் வேலைக்கு செல்ல முடியாத நிலை. என்  உடல் நலக்குறைவினால் என் ஒரு பிள்ளை காலையில் என்னுடன் தொழிலுக்கு வருவதும் இன்னுமொரு பிள்ளை இங்கு வீட்டு வேலைகள் செய்வதும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்னால் பகலில் வீட்டை விட்டு வெளியில் வந்து ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன். அத்தோடு கஸ்டமான வேலைகள், நெருப்பின் அருகில் இருந்து பார்க்கும் வேலைகள் என எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எனது குடும்பத்தில் என் பிள்ளைகள் படும் கஸ்டத்தினை பார்த்து தினம் தோறும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எனது குடும்ப நிலையினை அறிந்து என் குழந்தைகள்  எல்லோரும் நல்ல முறையில் கல்வி கற்க செய்ய எனக்கு ஒரு வாழ்வாதாரத்துக்கான வழியினைக் காட்டுங்கள். இதனையே இங்கு பணி புரியும் உங்களையும், எங்கள் பகுதியில் அரச அதிகார்கலையும் கேட்கின்றேன் எனக் கூறி முடித்தார்..

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம் என்ற அண்ணா.. அதற்கான வழி அவனுக்கு கல்வியைக் கொடுப்பதால்தான் என்பதைக் கூறாமல் சென்றதுதான் தவறு அதனால்தான் ஆட்சிக்கு வரும் அனைத்துக் கட்டியும் இலவசங்களைக் கொடுத்து சிரிக்க வைக்கப் பார்கின்றார்கள் அவர்களால் சிரிப்பைக் காண முடிவதில்லை. அதை விடுத்து ஒரு குழந்தை கல்வி கற்பதில் தடையாய் இருக்கும் அந்த குடும்ப நிலையின் சூழலை மாற்றுங்கள் எல்லா குழந்தைகளும் சிரிப்பார்கள்.
     

No comments:

Post a Comment