Thursday 23 August 2012

ஒரு விதை ஒரு விருட்சம்……



சமூகம் சார்ந்த ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தும் போதுதான் நமது செயற்பாடுகள் மக்களை சரியான முறையில் சென்றடைகின்றது. நமக்கு நாமே என்ற எண்ணங்களை ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கும் தமது சமூகத்தின் மீது அக்கறையினை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இங்கு பதிவிடப்படுவது நமது நிறுவனம் சார்ந்து தங்களை ஒரு அமைப்பாக உருவாக்கத்துடிக்கும் சில கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் ”இளைஞர் அமைப்பு”.

 கடலூரின் பரங்கிப் பேட்டை ஒன்றியத்தின் கிராமியப் பகுதிகளில் பணியிணை மேற்கொள்ளும் போது நமது ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்களிடம் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர் இந்த இளைஞர்கள். நமது கிராமங்களில் நீங்கள் பணியிணை மேற்கொண்டு வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியினை அளிக்கின்றது, எங்கள் தம்பி தங்கைகளின் கல்வி மேம்பாடு, மற்றும் எங்கள் மக்களின் வாழ்வாதாரத்துக்காக செயற்படும் உங்களுடன் நாங்களும் இணைந்து செயற்பட ஆர்வமாக இருக்கின்றோம், நாங்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் எங்களை உங்கள் நிறுவனத்தினோடு தன்னார்வ அமைப்பாக சேர்த்துக் கொள்ள சம்மதிப்பீர்களா என கூறினார்கள்.

அருள்தேவன் அது பற்றி நம்மிடம் கூறிய போது அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. கடந்த வாரம் சிதம்பரம் சென்றிருந்த சமயம் அவர்களைப் பார்க்க முடியுமா என அருள்தேவன் அவர்களைக் கேட்ட போது அவர்கள் எங்கிருக்கின்றனர் என தொலைபேசியில் கேட்டு அறிந்து மாலை அவர்களை சந்திக்கச் செல்லலாம் என கூறிய போது மாலை அவர்களுடன் சந்திப்பதற்கான நேரத்தை முடிவு செய்து கொண்டு பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளுக்குச் சென்று வரலாம் என முடிவு செய்து சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்லும் பேரூந்தில் அமர்ந்தேன். பேரூந்து கூட்டமாகத்தான் இருந்தது ஆனால் கூட்டம் வித்தியாசமானது பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் ஜோடி ஜோடியாக பேரூந்தின் இருக்கைகளை நிறைத்திருந்தனர். அது ஒன்றும் பெரிய விஅசயமில்லை என்றுதான் தோன்றியது எனக்கு கல்லூரி மாணவர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் ஏற்கனவே பதிந்து இருந்தபடியினால்… சுற்றுலாப் பகுதியில் இறங்கிய போது அங்கிருந்தும் பல ஜோடிகள் வந்த பேரூந்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்..

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் இப்பகுதியில் ஒரு இயற்கையின் வரப் பிரசாதம் 20 தொடக்கம் 25 கிலோ மீட்டர் வரை பரந்து கிடக்கும் இந்த காட்டில் ஏராளமான அரியவகை உயிரிகளின் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மேற்கு வங்கத்தில் இருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்த படியாக பெரிய சதுப்பு நிலக் காடு இதுதான். அதனை அரசினால் சுற்றுலா பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பதினால் ஏராளமான இயந்திரப் படகுகள் தயார் நிலையிலும் பல படகுகள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தன உள்ளே சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை, பேச்சுத்துணைக்கு கூட ஆள் இல்லாததால் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த எல்லாவற்றையும் பார்த்து விட்டுத் திரும்பினேன்.

மாலை சிதம்பரம் கலை அறிவியல் கல்லூரியின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்து அவர்களைச் சந்திக்க காத்திருந்தோம். கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர் அவர்களுக்கு இடையில் சில நண்பர்களுடன் பேசியபடியே வந்த  விஜயபிரகாஷ் எங்களைப் பார்த்து புண்ணகையுடன் அறிமுகமானார். அவருடன் வந்த நண்பர்களை அறிமுகப் படுத்திக் கொண்டார் அங்கேயே தொடர்ந்து பேச சரியான இடமாக இருக்காது என்பதனால் அருகில் இருந்த வயல் வெளி எந்த இடையூறுகள் இல்லாமல் பேசுவதற்கு சரியான இடமாக தென்பட்டது நாங்கள் அவ்விடத்தை சென்று அடந்த போது அங்கே வந்து சேர்ந்தது 12 பேர் சேர்ந்த மாணவர் குழு.

முதலில் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள் வேதியல் இளநிலை மூன்றாம் வருடம் படிக்கும் இவர்கள் சிதம்பரத்தின் நகர்புறப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கல்லூரியினால் ஒன்றான நண்பர்கள் விஜயபிரகாஷ், செளந்தர், இளையராஜா, சிவச்சந்திரன், அருள்ஜோதி, பிருந்தா, ரேவதி, தங்கமொழி, அருளரசி, காமாட்சி, ஆனந்தலட்சுமி, ராஜேஸ்வரி என்ற 12 பேரில் 7 பேர் பெண்களாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அருள்தேவன் அவர்கள் நான் அங்கு வந்திருக்கும் நோக்கத்தினை கூறினார், எனக்கும் அந்த மாணவர்களின் நோக்கத்தின் மீது இருந்த ஆர்வத்தை கூறினேன், இதுவரை நீங்கள் அமைப்பாக என்ன செய்ய முயற்சித்தீர்கள் என்ற கேள்வியுடன் அவர்களுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

முதலில் அவர்கள் குழுவின் தலைவராக இருக்கும் விஜயபிரகாஷ் பேசினார். இது எங்கள் கல்லூரிக் காலத்தின் இரண்டாவது வருட ஆரம்பத்தில் உருவான நோக்கம் தான், ஒன்றாக சேர்ந்து எங்கள் பகுதிகளில் சென்று பார்க்கும் போது இவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போகும் இது பற்றி நண்பர்களுடன் பேசும் போதும் அவர்கள் மத்தியிலும் அது தொடர்பாக ஆர்வம் இருந்து வந்தது, முதலில் கல்லூரி அளவில் யோசித்தோம் என்ன செய்வது என்பதற்கு முதல் செயற்பாடாக நாம் கிராமங்களில் ஏன் மாலை வகுப்புக்கள் மாணவர்களுக்கு இலவசமாக எடுக்க கூடாது என்ற வினாவினை முன் வைத்தார் அருளரசி, அதன்பின்பாக எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும் எல்லா பெண் தோழிகளும் எங்கள் பகுதியினில் மாலை நேர இலவசக் வகுப்புக்களை எடுத்துவருகின்றனர் எனக் கூறி முடித்தார்.

  அடுத்ததாக சிவச்சந்திரன் தொடந்தார் எங்களுக்கு அமைப்பாக செயற்பட முடிவு செய்ததும் முதலில் தோன்றியது இரத்ததானம் செய்ய முன்னிற்க வேண்டும் என்று அதன்படி சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் எங்கள் குழுவில் இரத்தம் கொடுக்க கூடிய நிலையில் உள்ளவர்கள் பெயர்கள் அனைத்தினையும் பதிந்திருக்கின்றோம், எங்கள் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களை இரத்ததானம் செய்ய தூண்டி வருகின்றோம் எங்கள் குழுவில் உள்ள 5 பேர் இதுவரை 2 – 3 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்து இருக்கின்றோம் எனக் கூறினார்..


அடுத்து பேச்சினைத் தொடர்ந்தார் ரேவதி தற்போது எனது வீட்டில் 25 மாணவர்கள் மாலை நேர வகுப்பிற்காக வருகின்றனர், என்னுடன் எனது தோழிகளும் வந்து வகுப்பு எடுப்பதற்கு உதவுகின்றனர், நண்பர்கள் சிலரை எங்கள் பகுதியில் பள்ளி செல்லாத மாணவர்கள் வீட்டுக்கு சென்று பேச சொல்வேன் அவர்கள் சென்று அவர்கள் பெற்றோருடன் பேசுவார்கள் பள்ளிக்கு செல்ல நோட்டு, பைகள் இல்லையென்றால் சில நேரங்களின் அவற்றை வாங்கி கொடுப்பதற்கு எங்களால் ஆன உதவிகலை செய்து வருகின்றோம். எங்களது நட்பு வட்டத்தை இப்படியானதொரு பொதுச் சேவை செய்யும் அமைப்பாக மாற்றியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது எனக் கூறி முடித்தார்.

அடுத்து சிவச்சந்திரன் தொடர்ந்தார் எங்களின் நோக்கம் பெரியதாகப் பட்டது இதனை நாங்கள் தனியாக நின்று சாதிப்பதற்கு முடியுமா என்ற ஒரு பய உணர்வு தோன்றியது அப்போதுதான் எங்கள் பகுதியில் பணிபுரிந்துவரும் Skills India வுடன் கைகோர்த்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தோம், அதனை அருள்தேவன் அவர்களிடம் பேசியபோது மகிழ்ச்சியாக வரவேற்றார் எங்களுக்கு பல பணிகளை கிராமங்களில் ஆற்றவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது ஆனால் நாங்கள் இதுவரை செய்தது எல்லாம் எங்கள் அறிவுக்கு எட்டியவைதான் அவற்றை உங்களோடு சேர்ந்து மேலும் பெரிதாக எம் மக்களுக்கு செய்ய ஆசைப் படுகின்றோம் எனக் கூறினார்.


 

அவர்களுக்கிடையில் அடுத்ததாக பேசினார் அருள்ஜோதி இவர் இவர்கள் வகுப்பு அல்லாமல் வேறு பாடப் பிரிவைச் சேர்ந்தவர் நான் இவர்களுடன் கல்லூரியில் உரையாடுகின்ற பொழுது இவர்கள் இப்படியானதொரு அமைப்பினை செயற்படுத்த முனைவதைப் பார்த்து என்னையும் இவர்களுடன் இணைத்துக் கொண்டேன். கல்லூரியில் படிக்கும் இக்காலத்தில் எங்கள் சமூகத்தின் மீதான அக்கறையினை வெளிப்படுத்தும் விதமாக இந்த குழு செயற்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், ஆனால் எங்கள் அமைப்பின் மூலம் செய்வதற்கான செயற்பாடுகளின் அளவு ஒரு எல்லைக்கு அப்பால் செயற்படுத்த முடியாத நிலையில் இருந்த போது இதனை ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு இயங்கும் தன்னார்வ அமைப்பாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது, அந்த நிலையில்த்தான் எங்கள் பகுதி கிராமங்களில் பணியாற்றிவரும் Skills India தொண்டு நிறுவனம் பற்றிய பேச்சினை எடுத்தோம் அதன் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் எங்களுக்கு நன்கு பரிட்சையமானவர் பல செயற்பாடுகளின் போது கூட நின்று உதவிகள் செய்தவர் எனவே அவரிடம் இது பற்றிப் பேசிய போது மகிழ்ச்சியுடன் வரவேற்று எங்கள் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டு ஆற்றவேண்டிய செயற்பாடுகள் என்ன என்பதை விளக்கினார் அதன் படி தற்போது நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் , இந்த வேளையில் மேலும் எங்களது இந்த இளைஞர் அமைப்பினால் என்னவெல்லாம் செயலாற்ற முடியும் என எங்களுக்கு விளக்க வேண்டும் எனக் கேட்டு முடித்தார்..

அவரது பேச்சில் இருந்த தெளிவும், இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதில் இருந்த ஆர்வமும் எங்களை மேலும் ஆச்சரியத்தையும் பெரு மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது, அந்த ஆர்வம் அவருடையது மட்டுமல்லாமல் அந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் ஆர்வம் என்பது அவர்கள் கிராமங்களில் செய்துவரும் செயற்பாடுகளில் இருந்து புலனாகிறது. அவர்கள் பேசி முடித்த பின்னர் எனது பேச்சினை ஆரம்பித்தேன், நண்பர்களே உங்களது ஆர்வமும், செயற்பாடுகளும் உண்மையில் எமக்கு பெருமகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றன நீங்கள் இப்போது செய்துவரும் ஒவ்வொரு செயற்பாடுகளும் பாராட்டுக்கு உரிய செயல்களே, உங்களை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லும் அருள்தேவன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்ட கடமைப் பட்டிருக்கின்றோம், பொதுவாகவே சில வேலைகளை இவர்கள்தான் தகுதியானவர்கள் என்ற கோட்பாடு இருக்கின்றது அந்த வகையில் கல்லூரி மாணவர்களாகிய உங்களால் கிராமங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளில் முக்கியமானவையும், முதன்மையானவையும் மக்கள் மத்தியில் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, ஒவ்வொரு வீடாக சென்று பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவ்ர்களது பிரச்சனைகளை வெளிக் கொண்டு வாருங்கள், அவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாத காரணங்களை ஆய்வு செய்யுங்கள் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து ஆலோசனையாக முன் வையுங்கள், இவ்வாறான உதவிகள் உங்களைப் போன்றவர்களைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியாது.

அதே போல் கல்லூரி மாணவிகள் நீங்கள் ஆற்றிவரும் பணிகளோடு உங்கள் கிராமங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கான சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுங்கள் அவர்களின் சுகாதார பழக்க வழக்கங்களை சரியான முறையில் கடைப்பிடிக்க வழிகாட்டுங்கள், இது கிராமங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கினை ஆற்றக் கூடியது, குழந்தைகளின் உடல்நலம் , கர்ப்பிணி பெண்கள் பற்றிய தகவல்கள் பற்றியெல்லாம் தரவுகளை வைத்திருந்து அந்த பகுதியின் பெண்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் பின்னால் இருந்து செயற்படுபவர்களாக இருங்கள்

இந்த அமைப்பினை இளைஞர்கள் கிராம வளர்ச்சி அமைப்பாக மாற்றம் செய்து உங்கள் பகுதியில் இருந்து கல்லூரியில் படிக்க வரும் ஒவ்வொரு மாணவரையும் இதில் தன்னார்வ தொண்டராக இணைப்பதன் மூலம் இந்த அமைப்பு நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் செயற்பட்டுவரும் பெரிய அமைப்பு ஒன்றாக மாற்றம் பெறும் என்பதில் அய்யம் இல்லை, எங்கள் நிறுவனத்தின் பணிகளும் மாணவர்களினதும், மக்களினது வாழ்வாதாரம் , மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த செயற்பாடுகளாக இருப்பதனால் இவை ஒவொன்றிலும் உங்கள் பங்களிப்பினை வழங்க முடியும் இவ்வாறான செயற்பாடுகளைத்தான் உங்களிடம் இருந்து எங்கள் நிறுவனம் எதிர்பார்கின்றது எனக் கூறி முடித்ததும் எல்லோரும் அந்த கருத்தினை வரவேற்றனர் அடுத்து பேசிய மாணவர் இளையராஜா உண்மையில் கிராமங்களில் நாங்கள் செயற்பட ஆரம்பித்த போது எவ்வாறான சேவையினை செய்வது என்ற குழப்பம் இருந்து கொண்டே வந்தது இப்போது சரியானதொரு பாதை கிடைத்திருப்பதாக உணர்கிறோம், ஒரு கல்லூரி மாணவராக இருக்கும் எங்களால் என்னவெல்லாம் எங்கள் சமுகத்திற்கு செய்ய முடியும் என்பதை சரியாக எடுத்துரைத்தீர்கள், எங்கள் அமைப்பின் வளர்ச்சி எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதற்கு சரியான முறையினை கூறினீர்கள் இதை கறுத்தில் கொண்டு எங்கள் பகுதியில் இருந்து கல்லூரிக்கு வரும் ஒவ்வொரு மாணவர்களையும் இந்த அமைப்பின் தன்னார்வ தொண்டராக மாற்றுவோம் என இப்போது உறுதியளிக்கின்றோம். இன்று நாங்கள் இட்ட இந்த விதை வருங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் விருட்சங்களாக மாறும் மாற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என கூறி முடித்தார்.

அதன் பின்னர் எல்லா மாணவர்களுடனும் அவர்களின் குடும்பநிலை மற்றும் சமுக சூழல்கள் பற்றி பேசிமுடித்துவிட்டு அவர்களிடம் இருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்.  இந்த சந்திப்பு என்னை சில சலனங்களில் இருந்து மீட்டிருந்தது காலையில் பிச்சாவரம் பேரூந்தில் ஜோடி ஜோடியாக கண்ட கல்லூரி மாணவர்கள் என் கண்முன்னே வந்து போனார்கள். இந்த பருவம் மிகவும் உணர்ச்சிப் பிளம்பானது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் அவர்களின் உணர்வுகளை வெளிக் கொண்டு வருகின்றனர். எல்லோருக்கும் இவர்களைப் போன்ற பொது நலச் சிந்தனை இருந்து விடுவதில்லை அதனால் இவர்களை எங்கள் நிறுவனம் இந்த அளவோடு விட்டுவிடுவதில்லை அடுத்தடுத்த இவர்கள் வளர்ச்சியின் பின்னால் துணை நிற்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஒடிக் கொண்டே இருந்தது….


இந்த விதைகள் விருட்சம் ஆகட்டும்

No comments:

Post a Comment