Friday, 14 September 2012

எங்கள் வறுமை போக்க வழி என்ன…


 
சுபஸ்ரீ
சுபஸ்ரீ கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவரும் மாணவி, அவர்களது குடும்பம் தற்போது வாழ்வதற்கான வழி இல்லாமல் பல கஸ்ட நிலையில் இருப்பதாக அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியர் தெரிவித்து இருந்தார் அந்த வகையில் அவரை சந்திக்க சென்ற போது அங்கு அவரது அக்கா சுகன்யா ,(வயது -17) இருந்தார் அவர்களின் குடும்ப நிலை மிகவும் பின் தங்கியதாக இருக்கின்றது என்பதை அவர்களது இருப்பிடமும் அவர்கள் வீட்டில் எஞ்சியிருக்கும் சில பொருட்களுமே சாட்சியாக இருந்தன.

சுகன்யா
எம்மை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றிக் கேட்டேன். அப்பா தனபால் வயது 50 ஆக இருக்கும் போது கடந்த 6 மாதத்துக்கு முன்னர் ஆஸ்மா நோயினால் காலமாகிவிட்டார், அம்மா வனிதா வயது 42 அப்பாவின் இறப்புக்கு பின்னர் அருகில் இருக்கும் ஒருவரது வீட்டுக்கு காலையில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்து வருகின்றார், இதன்மூலம் மாதம் இவர்களுக்கு 600 ரூபாய் கிடைக்கின்றது. அடுத்து சுகன்யா கிள்ளை மேல் நிலைப் பள்ளியில் 8 வது படித்ததுடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் சமையல் வேலை செய்து குடும்பத்தினரை பார்த்து வருகின்றார். இறுதியாக சுபஸ்ரீ கிள்ளை துவக்கப் பள்ளியில் 4 வது படிக்கும் 9 வயது சிறுமி.

ஆட்டு தொழுவமான அப்பாவின் தேனீர்க் கடை
இவர்கள் எல்லோரும் இருக்கும் வீடு ஒரு அறை மட்டும் கொண்டதான குடிசை வீடு கிள்ளையில் இருந்து பிச்சாவரம் செல்லும் பிரதான வீதியின் ஓரத்தில் அமைந்திருக்கின்றது. அருகிலே ஒரு பாழடைந்த குடிசை அது பற்றி சுகன்யாவிடம் கேட்டேன். எங்கள் அப்பா உயிருடன் இருக்கும் போது இதிலே தேனீர்க் கடை நடத்தி வந்தார். ஏழ்மை நிலை இருந்தாலும் குடும்பத்தில் அன்றாடம் உணவுக்கு என்றும் பஞ்சம் வந்ததில்லை அப்பா ஒருவரின் உழைப்பினை நம்பியே இந்த குடும்பம் சென்று கொண்டிருந்தது.

நான் உட்பட எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சளி இழுவை(ஆஸ்மா நோய் ) இருக்கின்றது. இந்த நோயின் காரணமாகவே அப்பா இறந்தார். அவரது இரப்புக்கு பின்னர் அன்றாடம் சமையல் செய்வதற்கு கூட முடியாத நிலை 2 மாதத்துக்கு முன்பிருந்துதான் அம்மா அருகில் உள்ள ஒரு வீட்டில் சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்கும் வேலைக்கு சென்றுவருகின்றார். இப்போது இந்த தேநீர் கடையில் எங்கள் உறவினர் ஒருவரது 2 ஆடுகளைப் பராமரித்து வருகின்றோம் அவர் அந்த ஆடுகள் விற்கும் போது எமக்கும் கொஞ்சம் பணம் தருவதாக கூறி இருக்கின்றார் எனக் கூறி முடித்தார்.

அம்மா வனஜாவுடன் சுபஸ்ரீ
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கு வந்து சேர்ந்தார் சுபஸ்ரீ பள்ளியில் எம்மை பார்த்ததாக நினைவு கூர்ந்தார். அப்போது அவரிடம் அம்மாவை அழைத்துவரும்படி சுகன்யா அவர்கள் அனுப்பி வைக்க 10 நிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தார். வனஜா 41 வயது என்பது அவரது தோற்றதில் இல்லை 60 வயதினைக் கடந்தவர்களைப் போல இருந்தார் காரணம் அவரது உடலில் உள்ள நோயின் தன்மையினால் இருக்கலாம். அவரிடம் வழமை போல் என்னை அறிமுகம் செய்தபோது அவரிடம் இருந்து பதில் இல்லாமல் மீண்டும் என்னவென்று கேட்டார் அப்போதுதான் சுகன்யா எங்க அம்மாவுக்கு காது கேட்காது சின்ன வயதில் இருந்து காது கேட்காததினால் அவர் வெளியில் எங்கும் செல்வதில்லை என்று கூறினார். அதன் அவரிடம் மண்ணிப்பு கேட்டுக் கொண்டு அவரிடம் அவர் நிலை குறித்து கேட்டேன். எனக்கு காது கேட்காதது என் கணவர் இருக்கும் வரை ஒரு பிரச்சனையாக படவில்லை ஆனால் இப்போதுதான் அதற்காக கவலைப் படுகின்றேன், கூடவே ஆஸ்மா நோய் இருப்பதனால் என்னால் எங்கு சென்றும் வேலை செய்ய முடியவில்லை என் மகள் வீட்டில் சமைத்து வீட்டினை பார்த்து வருகின்றாள் சின்னவள் படிப்பில் நல்ல கெட்டிக்காரி ஆனால் அவள் 5ம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க கூடிய வசதி என்னிடம் இல்லை அதனால்தான் அருகில் வேலை கேட்டு சென்ற போது இங்கிருக்கும் ஒருவர் தனது வீட்டில் காலையில் பாத்திரம் கழுவும் வேலை தந்தார் அதன் மூலம் தான் கொஞ்சம் பணம் கிடைக்கின்றது. எனது உறவினர் ஒருவரின் இரு ஆடுகளைப் பராமரித்து வருகின்றேன் இதனை அவர் விற்கும் போது கிடைக்கும் பணத்தினை தருவேன் என்றார். என சுகன்யா கூறியதை போன்று கூறினார்.

நீங்கள் ஏன் மறுபடியும் தேனீர் கடை நடத்த முயற்சிக்கவில்லை எனக் கேட்டபோது எனது உடல்நிலையை வைத்து புகை நெருப்பின் முன்னால் இருக்க முடியாது அதனால்தான் என்னால் செய்ய முடிய வில்லை எனக் கூறினார், எனது மகளுக்கும் இந்த ஆஸ்மா இருந்தாலும் அவள்தான் உணவு தயார் செய்கின்றாள் என்றார். என்ன வேலைகள் செய்வீர்கள் என்று கேட்ட போது வேலைக்கு போகும் அளவிற்கு உடல் நிலை இல்லை வீட்டில் இருந்து பார்க்கும் வேலை கூட செய்யும் அளவிற்கும் வீடு இல்லை. என்ன சார் செய்வது என்று எம்மிடமே அவர் கேட்டதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

அவர்களிடத்தில் குழந்தையின் படிப்பினை நிறுத்தி விடாதீர்கள் அவர் தொடர்ந்து படிக்க எங்களால் இயன்ற உதவிகளை நிச்சயமாக உங்களுக்கு செய்வோம் என்ற உறுதியினைக் கூறி அவர்களிடத்தில் இருந்து விடைபெற்றோம். உழைக்க கூடிய உடல் ஆரோக்கியம் அவர்களிடத்தில் இல்லை, வீட்டிலிருந்து செய்யும் தொழிலுக்கும் வசதி இல்லை ஆனால் அடுத்தவர்களின் ஆட்டினை பராமரித்து வரும் இவர்களுக்கு சொந்தமாக எதாவது ஆடு கோழிகளை வழங்கினால் அதன் மூலம் இவர்கள் வருமானத்தினை பெற்று குடும்பத்தின் வறுமையினை போக்க முயற்சிக்கலாம் என்ற என்னமே இவர்களைப் பார்த்து வந்ததில் இருந்து என் மனதில் மேலோங்கி இருந்தது. இலவசமாக கால்நடை கொடுக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் கூட அரசியல் செல்வாக்கினை தாண்டி இந்த ஏழை மக்களுக்கும் கிடைக்க முயற்சிப்பது இல்லை என்பதுதான் உண்மை..

No comments:

Post a Comment